'ஒரே இரவில் தூக்கி எறியப்பட்ட அந்தஸ்து'!.. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின்... தற்போதைய நிலை என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தாலிபான்கள் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து ஹிராத், காந்தகார், மசார் இ சரீப் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினர். இன்று காலை ஜலாலாபாத் நகரையும் கைப்பற்றி அங்கு வெள்ளைக் கொடிகளை ஏற்றினர். அப்போது, தாலிபான்கள் நகருக்குள் நுழைந்ததுமே அரசுப் படையினர் சண்டையின்றிச் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.
காபூல் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்துக் காபூலை முற்றுகையிட்டனர். போரின்றி ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், அது குறித்துப் பேச்சு நடத்த விரும்புவதாகவும் கூறி அதிபர் மாளிகைக்குச் சென்ற தாலிபான்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் குறித்து அதிபர் மாளிகையில் தாலிபான் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். பின்னர், தாலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகினார். அவர் நாட்டைவிட்டு வெளியேற உள்ளதாகவும், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் புதிதாக அமையும் இடைக்கால அரசுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி அகமது ஜலாலி தலைமையேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காபூலின் புறநகரில் அமெரிக்காவின் விமானப் படைத்தளமாக இருந்த பாக்ராமுக்கு தாலிபான் படையினர் சென்றதும், அவர்களிடம் அரசுப் படையினர் சரணடைந்தனர். பாக்ராம் சிறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த தாலிபான்கள், அங்கிருந்த கைதிகள் அனைவரையும் விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
