'நெலமை கைய மீறி போயிடுச்சு'!.. உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!.. தாலிபான்களிடம் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை!.. மாஸ்டர் ப்ளான்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மிக வேகமாக முன்னேறி வருவதால், தாலிபான்களிடம் அமெரிக்கா முக்கியமான ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தாலிபான்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கான் ராணுவம் திணறி வருகிறது. இதையடுத்து காபூல் எவ்வளவு காலம் தாங்க முடியும் என்பது குறித்த அமெரிக்க உளவுத் துறை அறிக்கையில், இன்னும் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தான் காபூலை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விடுவார்கள் என எச்சரித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், தாலிபான்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் 2020ம் ஆண்டு உடன்படிக்கைக்கு எதிரானவை என்றும், தாலிபான்கள் சமாதான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு, சண்டை நிறுத்தத்திற்கு உறுதியளித்தனர் எனவும் கூறினார். தற்கொலைப் படையினர் தூதரகத்திற்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள காபூல் நகரத்தில், அனைத்து வகையான வழிகள் மூலம் நகரத்தில் இருந்து தப்பி ஓடுவதால் பெரும் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேற்கத்திய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இப்போது வெளிநாடுகள் தங்கள் தூதரக ஊழியர்களை காபூலை விட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச விமான நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதற்கிடையே, தாலிபான்கள் தற்போது ஆப்கானின் 65% சதவிகித பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். புதன்கிழமை, வடகிழக்கு மாகாணமான பதக்ஷானில் உள்ள ஃபைசாபாத், தாலிபான்களால் கைப்பற்றப்பட்ட எட்டாவது மாகாண தலைநகரமாகும்.
மேலும், தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றும் போது, அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கக்கூடாது என அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகமானது, அந்த நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது. எனினும், தற்போது அமெரிக்க தூதரகத்தை முழுமையாக வெளியேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால், ஆப்கானில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.

மற்ற செய்திகள்
