புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய பத்திரிக்கையாளர்.. காலைல வீட்டு வாசல்ல காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பேசிவந்த பத்திரிக்கையாளர் வீட்டிற்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செய்த செயல் பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

போர்
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. இந்நிலையில், போர் காரணமாக ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோரை அச்சம் கொள்ள வைக்கும்வகையில் அந்நாட்டு அரசு நடந்துகொள்வதாக உலகம் முழுவதிலும் இருந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. அதை தொடர்ந்து, உக்ரைன் போர் காரணமாக புதினை விமர்சித்த ரஷ்யாவின் மூத்த பத்திரிக்கையாளருக்கு தற்போது புதிய சிக்கல் முளைத்துள்ளது.
மூத்த பத்திரிக்கையாளர்
ரஷ்யாவின் காஸ்ப்ரோம்-மீடியா உதவியுடன் இயங்கிவரும் Ekho Moscow என்னும் ஊடகத்தின் தலைமை எடிட்டராக இருப்பவர் அலெக்ஸி வெனெடிக்டோவ். 66 வயதான இவர் உக்ரைன் மீது போர் தொடுப்பதாக புதின் அறிவித்ததை கடுமையாக எதிர்த்துவந்தார்.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி அவருடைய ஊடகம் ரஷ்ய அரசால் முடக்கப்பட்டது. இருப்பினும் அதிபருக்கு எதிரான கருத்துக்களை அவர் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிசிடிவி
இந்நிலையில், அலெக்ஸி வெனெடிக்டோவ்-ன் வீட்டு வாசலில் பன்றியின் தலையை ஒருவர் வீசி சென்றிருக்கிறார். உணவு டெலிவரி செய்யும் நபர் போல வந்த நபர், பன்றியின் தலையை அலெக்ஸி-யின் வீட்டு வாசலில் வைப்பது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
அலெக்ஸி வெனெடிக்டோவ் இது குறித்து பேசுகையில்," என்னை அச்சுறுத்தி அதன் வழியாக என்னை நாட்டை விட்டு வெளியேறச்செய்ய நினைக்கிறார்கள். ஆனால், நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். நான் யூத பாரம்பரியத்தை சேர்ந்தவன் என்றாலும் எனக்கு பன்றிக்கறி பிடிக்கும். வீட்டு வாசலை எனது மனைவி சுத்தம் செய்துவிட்டார். இந்த செயலை செய்தவர் உணவு டெலிவரி செய்பவர் போல உடை அணிந்திருந்தார்" என்றார்.
விசாரணை
இதுகுறித்து அலெக்ஸி வெனெடிக்டோவ் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். உணவு டெலிவரி நிறுவனத்தை தொடர்புகொண்ட அலெக்ஸி இதுகுறித்து விபரம் கேட்டிருக்கிறார். அப்போது குறிப்பிட்ட தேதியில் அந்த முகவரியில் இருந்து எந்த ஆர்டரும் வரவில்லை என்றும், வீடியோவில் இருக்கும் நபர் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றவில்லை எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் அதிபர் புதினை விமர்சித்துவந்த பத்திரிக்கையாளர் வீட்டின் முன்பாக பன்றியின் தலை வீசப்பட்ட சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
