‘உக்ரைன் விவகாரம்’.. இது நடந்தா முழுக்க முழுக்க ரஷ்யா தான் பொறுப்பு ஏத்துக்கணும்.. ஜோ பைடன் பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். இரு நாடுகள் இடையே போர் தொடங்கி இருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. போரை நிறுத்த உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜோ பைடன்
இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் பேசிய அவர், ‘அதிபர் புடின் பேரழிவு விளைவிக்கக்கூடிய மற்றும் மனித இனத்திற்கு துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும். நாங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’ என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தடை
இதனிடையே ஜி7 நாடுகளுடன் ஆன்லைன் வழியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (24.02.2022) கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு உக்ரைன் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு மழை பொழியும் ரஷ்யா.. பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக உக்ரைன் மக்கள் செல்லும் இடம்..!