இனி இயல்பு வாழ்க்கையே இப்படிதான் இருக்க போகுது.. உலக நாடுகளுக்கு ‘எச்சரிக்கை’ மணி அடித்த IPCC..!
முகப்பு > செய்திகள் > உலகம்புவி வெப்பமடைவதால் மனித குலம் பேராபத்துகளை சந்திக்க இருப்பதாக ஐநா பருவநிலை மாற்றத்துக்கான குழு எச்சரிக்கை செய்துள்ளது.
பருவ நிலை மாறுபாடு என்பது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதை எதிர்கொள்வதற்காக, கடந்த 2015-ம் ஆண்டு பாரிசில் நடந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 195 நாடுகள் கையெழுத்திட்டன. அதன்படி, 2030-க்குள் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்ஷியஸ் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு, காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடுவதை தடுக்க வேண்டும்.
இந்த நிலையில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர்கள், விஞ்ஞானிகள் இணைந்து, IPCC (Intergovernmental Panel on Climate Change) எனப்படும் நாடுகளுக்கு இடையேயான பருவ நிலை மாறுபாடு குழுவின் 6-வது அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘புவி வெப்பமடைதல் பிரச்சனை பூமியின் அனைத்து பகுதியிலும் உள்ளது. சுற்றுச்சூழல் மாசு உட்பட அனைத்து வகையிலும் மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள சீர்கேட்டை சரி செய்வதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் கூட ஆயிரம் ஆண்டுகள் போதாது.
இயற்கையை தொடர்ந்து சீரழித்து வருவதால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை, பிரச்சனைகளை உலக நாடுகள் தற்போது சந்தித்து வருகின்றன. சராசரி வெப்பநிலை உயர்வு, ஆர்டிக் பகுதியில் பனிப் பாறைகள் உருகுவது, கடும் பஞ்சம், அதிக அளவில் மழை அல்லது வறட்சி என அதன் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.
பாரிஸ் ஒப்பந்தப்படி, 2030-ம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலையை குறைக்க வேண்டும். ஆனால் தற்போது 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை ஏற்கனவே உயர்ந்துள்ளது. எதிர்பார்த்ததை விட மிக அதிக வேகத்தில் புவி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது.
கடந்த 2018-ல் கணித்ததை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது 2030-க்குள் சராசரி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்ஷியஸை தாண்டி விடும். கடல் மட்டம் உயர்ந்து வரும் வேகமும் தீவிரமாக உள்ளது. கடந்த 1901-1971 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 1.33 மி.மீ., அளவுக்கு கடல் உயர்ந்தது. ஆனால் 2006-2018-ம் ஆண்டுக்குள் 3.7 மி.மீ., ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 1950-க்கு பின் மிக கடுமையான சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் வெப்பம் நிலவுவது அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடும் குளிர் நிலவுவது குறைந்துள்ளது. மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள இயற்கை சீர்கேடுகளே இந்த மோசமான நிலைக்கு காரணம். அதிலும் நகர் பகுதிகள், புவி வெப்பமடைதலால் பெரிய பாதிப்பை சந்திக்கும். குளிர்ச்சியூட்டும் நீர் நிலைகளோ, பசுமை வளங்களோ இல்லாததே நகர் பகுதிகளில் அதிக வெப்பம் நிலவுவதற்கு காரணம்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு, 50 ஆண்டுகளில் இல்லாத அளவு என்பதெல்லாம் இனி குறிப்பிட முடியாத அளவுக்கு தகிக்கும் வெப்பம், கடும் மழை, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் இனி அதிக அளவில் குறைந்த இடைவெளியில் ஏற்படும். இதுபோன்ற சீற்றங்கள் எதிர்பாராத பகுதிகளில் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும். மேலும் இரண்டு இயற்கை சீற்றங்கள் ஒரே நேரத்தில் ஏற்படுவதும் அதிகரிக்கும். அதாவது கடும் வறட்சியும், வெப்பமும் ஒரே நேரத்தில் நிகழும்’ என உலக நாடுகளுக்கு IPCC எச்சரிக்கை செய்துள்ளது.
The #IPCC released its latest #ClimateReport today, #ClimateChange 2021: the Physical Science Basis.
“The role of human influence on the climate system is undisputed.” – Working Group I Co-Chair @valmasdel
Report ➡️ https://t.co/uU8bb4inBB
Watch the video, 🎥 ⬇️ pic.twitter.com/hZOSU1xWQR
— IPCC (@IPCC_CH) August 9, 2021