‘அப்படி சொல்றத மொதல்ல நிறுத்துங்க..!’.. பும்ரா பற்றி எழுந்த கருத்து.. ஆவேசமான கே.எல்.ராகுல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்த கருத்துக்கு கே.எல்.ராகுல் ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களை குவிக்க, அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. இதனால் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 303 ரன்களை குவித்தது.
இதன்பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்களை எடுத்திருந்தது. இதன் காரணமாக 5-ம் நாளில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக கடைசி நாளில் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் இளம் வீரரான கே.எல்.ராகுல், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பார்ம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில், ‘பும்ரா சிறப்பாக பந்து வீசி வருகிறார். மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார் என அவரை நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உண்மை அது இல்லை, அவர் எப்போதுமே ஒரு சிறப்பான பவுலர்தான். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நம்பர் 1 பவுலர் ஆன அவர், ஒரு இன்னிங்ஸில் விக்கெட்டை எடுக்கவில்லை என்பதற்காக அவரை குறை கூற முடியாது. இனிமேல் அதுபோல் பேசாமல் இருப்பது நல்லது.
பும்ரா எப்போதுமே ஒரு சிறப்பான பவுலர்தான். அவரால் எந்த ஒரு சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்க முடியும். நல்ல வீரர்களுக்கு ஒரு சில போட்டிகள் மோசமாக அமைந்துவிடும். அந்த வகையில் சில போட்டிகளில் பும்ராவுக்கு மோசமாக அமைந்துவிட்டது. அவர் எப்போதுமே நம்பர் 1 பவுலர்தான். சில போட்டிகளில் அவர் சொதப்பி விட்டதால், அவரை பார்ம் இழந்து விட்டார் என்று யாரும் கூற வேண்டாம்’ என கே.எல்.ராகுல் பும்ராவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பும்ராவுக்கு மோசமான தொடராக அமைந்துவிட்டது. அதனால் அப்போது அவர் மீது பலரும் விமர்சனங்களை வைத்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் எடுத்து பும்ரா அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.