‘WTC FINAL-க்கு வந்த புதிய பிரச்சனை’!.. போட்டி ஆரம்பிக்கும் முதல் நாளே இந்த சோதனையா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள சவுத்தாம்ப்டனில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐசிசி முதல்முறையாக நடத்தும் இந்த சாம்பியன்ஷிப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போட்டி நடைபெற உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், குறிப்பாக போட்டி நடைபெறும் முதல் நாளான ஜூன் 18-ம் (நாளை) தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், போட்டியின் இரண்டாம் நாளான ஜூன் 19-ம் தேதி மழை பெய்ய 60% வாய்ப்புள்ளதாகவும், மூன்றாவது நாள் மழை பெய்ய 68% வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 21-ம் தேதி மட்டுமே மழை இருக்காது என்று தெரிகிறது. மேலும் போட்டியின் கடைசி நாளான ஜூன் 22-ம் தேதி மழை பெய்ய 56% வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழை காரணமாக தடைபட்டால், ரிசர்வ் நாள் வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்திருந்தது. மழையால் ஒரு நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டால், அடுத்த நாள் விரைவாக போட்டி தொடங்க அனுமதிக்கப்படும் என்றும், அதேசமயம் மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக விளையாட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் போட்டி நிறுத்தப்பட்டால் இரண்டு அணியும் சாம்பியன் என்று அறிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.