'வேடிக்கை பார்த்துட்டு இருப்போம்னு நெனைக்காதீங்க!.. என்ன நடந்தாலும்... நிச்சயமா திருப்பி அடிப்போம்!'.. இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்லடாக்கில் முக்கிய எல்லை பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்ததாக கருத வேண்டாம் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என சீனாவின் குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில், சீனா ஆக்கிரமித்திருந்த பிங்கர் 4 மலைத்தொடரின் சிலபகுதிகளை இரவோடு இரவாக இந்தியப் படைகள் அதிரடியாக மீட்டதையடுத்து, எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் தனது படைபலத்தை அதிகரித்துள்ளது.
அமைதிப் பேச்சுகளின் போது படைகளை முழுவதும் விலக்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்ட சீனா, பிங்கர் 4 முதல் 8 வரையிலான மலைத் தொடரை தனது கட்டுப்பாட்டில் வைத்து படைகளை விலக்கிக் கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டி வந்தது.
இந்நிலையில், இந்தியப் படையினர் பிங்கர் 4 பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பை முறியடித்து சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். சீனப் படையினர் முன்னேறி வருவதைத் தடுக்க பிங்கர் 2, பிங்கர் 3 மலைச் சிகரங்களில் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
டெஸ்பாங் தவுலத் எனுமிடத்தில் சீனா அதிக அளவில் படைகளைக் குவித்திருப்பதால் அதனை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கிழக்கு லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரை எந்த வித அத்துமீறல்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய ராணுவம் தனது படைபலத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகளிடையே மூன்றாவது நாளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தன்னிச்சையாக எல்லை வரையறையை மாற்றியமைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. இதனை சீனா ஏற்க மறுப்பதால் நேற்றைய பேச்சுவார்த்தையும் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது.
அதைத் தொடர்ந்து, ராணுவத் தளபதி எம்.எம் நரவானே திடீர் என 2 நாள் பயணமாக லடாக் பயணம் மேற்கொண்டார். அங்கு ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பாங்கோங் த்சோ பகுதியில் சீனாவின் தந்திரங்களை இந்திய முறியடித்து மலைப்பகுதிகளை ஆக்கிரமித்த பின்னர் பதிலடி கொடுக்க முடியும் என்று சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் இந்தியாவை அச்சுறுத்தி உள்ளது.
குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
"சீனா அமெரிக்காவிடமிருந்து கடும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. மேலும், தைவான் நீரிணை மற்றும் தென் சீனக் கடல் போன்ற அதன் கிழக்குப் பகுதியில் பதற்றங்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது என்று இந்தியா நம்பக்கூடும். இது இந்தியா முன்னோக்கி செல்வதற்கும், சீனாவை சமரசம் செய்ய கட்டாயப்படுத்துவதற்கும் நல்ல வாய்ப்பு என்று கருதுகிறது" என கூறி உள்ளது.
"ஆக்கிரமிப்பு" என்று இந்தியாவை குற்றம் சாட்டிய குளோபல் டைம் இந்திய படைகள் சீன எல்லைக்குள் படையெடுத்து சீன துருப்புக்களை தாக்கினால், "கிழக்கு நோக்கி சீனா எந்த வகையான அழுத்தத்தை எதிர்கொண்டாலும், இந்தியா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியது வரும் என்று அச்சுறுத்தியுள்ளது.