'தடுப்பூசி விஷயத்தில்'... 'துணிச்சலாக புது ரூட்டை கையிலெடுத்த சீனா'... 'பாதிப்பு குறைய இதுதான் காரணமா?'... 'சந்தேகத்தை கிளப்பும் நாடுகள்'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஜூலை மாதமே துவக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதல்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளது. வைரஸ் பாதிப்பால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல நாடுகளும் மிகப் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பல நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட 7 கொரானா தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன. அதில் 4 மருந்து நிறுவனங்கள் சீன நாட்டைச் சேர்ந்ததாகும். இதையடுத்து இரண்டு கட்ட பரிசோதனைகளில் இந்த மருந்தை எடுத்தவர்களுக்கு பெரியளவில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், சீனா துணிச்சலாக ஒரு முடிவை எடுத்துள்ளது.
சீனாவில் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதலே மருத்துவத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மூன்று கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த பிறகே உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிகளை வணிகரீதியாக பயன்பாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கும் சூழலில், சீனா தன்னுடைய நாட்டு மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜெங் ஜாங்வே, சீனாவில் அவசர தேவைகளுக்காக சினோபார்ம் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி போடப்பட்டு வருவதை உறுதி செய்துள்ளார். மேலும் அடுத்த கட்டமாக, இந்த தடுப்பூசி உணவக பணியாளர்கள், அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் கடைகளில் பணியாற்றுபவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புபடி, கடந்த ஒரு மாதமாகவே அங்கு பாதிப்பு நாளொன்றுக்கு அதிகபட்சம் 50 என்ற நிலையிலேயே வந்துகொண்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் இந்த அளவுக்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு மக்களின் விழிப்புணர்வு மட்டுமின்றி, இதுபோல தடுப்பூசி போடப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. அதே சமயம் மூன்றாவது கட்ட பரிசோதனை நிலையில் உள்ள தடுப்பூசியை பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து குறித்தும் மற்ற நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.