"வீடோட மொத்த தீவும் விற்பனைக்கு".. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.. விலையை கேட்டுட்டு குஷியான மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்து அருகே உள்ள தீவு ஒன்றை விற்க அதனை பராமரித்து வரும் நிறுவனம் முன்வந்திருக்கிறது. அதன் விலை தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீவு
கடலுக்கு நடுவே குட்டி தீவில் வசிப்பது யாருக்கு தான் பிடிக்காது. அன்றாட இரைச்சல்கள் ஏதுமின்றி அமைதியாக கடல்களின் ஓசையில் வாழ்ந்திட பலரும் விரும்புகிறார்கள். அதனாலேயே தீவு பகுதிகளில் வீட்டை கட்டிக்கொண்டு செல்வந்தர்கள் செட்டில் ஆகிவிடுகிறார்கள். பல மில்லியன் டாலர் செலவு செய்வபர்களுக்கு தீவு வாங்குவது சிரமமான காரியம் இல்லை. ஆனால், ஸ்காட்லாந்தில் உள்ள தீவு ஒன்றின் விலையை கேட்டு பலரும் ஆச்சர்யமடைந்துள்ளார்கள்.
ஸ்காட்லாந்தின் அட்லாண்டிக் கடற்கரையில் அரானுக்கு தெற்கே அமைந்துள்ளது பிளாடா தீவு. இது 28 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான கான்கிரீட் தடுப்புகளால் உருவாக்கப்பட்ட சுற்றுச் சுவர், படகு வசதிகள் ஆகியவையும் இங்கே உள்ளன. இந்த தீவில் கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனை சுற்றி சில கட்டிடங்களும் இருக்கின்றன.
பெரிய வீடு
இந்த கலங்கரை விளக்கத்தை பாதுகாத்து வந்தவரின் வீடு தான் இங்கு உள்ளவற்றிலேயே மிகப்பெரிய கட்டிடம். அதன் உள்ளே ஐந்து படுக்கையறைகள், இரண்டு வரவேற்பு அறைகள் மற்றும் ஒரு சமையலறை உள்ளன. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் பயன்படுத்தப்படாமல், இருப்பதால் இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்கிறது இப்பகுதியை பராமரித்து வரும் நிறுவனம்.
இந்த வீட்டுக்கு பக்கத்தில் இரண்டு கட்டிடங்கள் அமைந்துள்ளன. ஒன்றில் வரவேற்பு அறை மற்றும் ஜெனரேட்டர் அறை இருக்கிறது. மற்றொரு கட்டிடத்தில் இரட்டை படுக்கையறை, குளியலறை, சமையலறை ஆகியவை இருக்கின்றன.
விலை
இந்த தீவில் உள்ள 2.5 ஏக்கர் நிலத்தில் தோட்டங்கள் அமைக்க ஏதுவான சூழல் நிலவுவதாகவும், இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே உருவாக்கிக்கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. வீடுகள் உள்பட தீவை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிறுவனம் அதன் விலையாக 350,000 யூரோக்களை (இந்திய மதிப்பில் 2.87 கோடி) நிர்ணயித்திருக்கிறது. இதுதான் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஏனென்றால் லண்டனில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலை இந்த தீவின் விலையை விட அதிகமாம். அதனாலேயே இந்த தீவை வாங்க பலரும் போட்டிபோடுவதாக தெரிகிறது.
Also Read | இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.. விமான போக்குவரத்து அமைச்சர் உருக்கம்.. ஆஹா இப்படி ஒரு பிளான் இருக்கா..?