“2008ல கணவர் இறந்துட்டாரு.. 12 வருஷமா இது என் கூடதான் இருக்கு!”.. ‘பெண்ணின் சூட்கேஸை’ சோதனையிட்டதும் ‘அரண்டு’ போன ‘கஸ்டம்ஸ்’ அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 74 வயது மற்றும் 52 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவரை பரிசோதனைக்காக தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்களின் சூட்கேசுக்குள் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர். இதனையடுத்து அப்பெண்களை விசாரித்ததில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் இருவரும் ஆர்மீனியா நாட்டவர்கள் என்பதும், அவர்களுள் ஒருவரது கணவர் 2008ல் இறந்து போனதாகவும் அவரது நினைவாக அந்த எலும்பு துண்டுகளை 12 ஆண்டுகளாக அந்தப் பெண் தன்னுடனே வைத்து பாதுகாத்திருந்ததோடு, தற்போது சொந்த நாட்டுக்கு திரும்பும் நிலையில், தன்னுடனே எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கிரேக்கத்திலிருந்து ஆர்மீனியா செல்லும் வழியில் மியூனிக் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் சோதனையின்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, விசாரிக்கப்பட்ட இந்த இரு பெண்களும் எந்த குற்றமும் செய்யப்படவில்லை என்கிற முடிவுக்கு வந்த பின்னர், இறந்துபோனவரின் மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை இரு பெண்களும் சமர்ப்பித்த நிலையில் அவர்களை சுங்க அதிகாரிகள் விடுவித்தனர்.
எனினும் இருவரும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக 12 ஆண்டுகள் காத்திருந்தது ஏன்? அதுவரை எலும்புக்கூடுகளை தன்னுடனே அப்பெண் ஏன் வைத்திருந்தார்? உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.