கொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... அடுத்தடுத்து அதிரடியாக 'மீண்ட' தமிழக மாவட்டங்கள்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 04, 2020 12:45 AM

கொரோனா பரவலை பொறுத்து இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த அடிப்படையில் தற்போது ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

5 Districts in Tamil Nadu Completely recovered from Corona

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1379 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 30 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் இருந்து சுமார் 6 மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து அதிரடியாக மீண்டுள்ளன.

இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையையும், வெளிச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலத்தில் நீடித்து வருகிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டாலும் அவர் சேலத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அங்கேயே சிகிச்சை எடுத்து வருவதால் கிருஷ்ணகிரி தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடித்து வருகிறது.

தமிழத்திலேயே முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் கொரோனா பிடியில் இருந்து சில நாட்களுக்கு முன் மீண்டது. இதையடுத்து கொரோனா அதிகளவில் பாதித்த மாநிலங்களில் ஒன்றான ஈரோடு கொரோனாவில் இருந்து மீண்டது. தொடர்ந்து கரூர் மாவட்டமும், சிவகங்கை மாவட்டமும் கொரோனாவில் இருந்து அடுத்தடுத்து மீண்டுள்ளன. இதில் லேட்டஸ்டாக தூத்துக்குடி மாவட்டமும் இணைந்துள்ளது.

பொதுமக்கள் , அமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீசார், சுகாதாரத்துறை, வருவாய் துறையினர், தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலரின் ஒத்துழைப்போடு தான் மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது. எனினும் கொரோனாவில் இருந்து மீண்டு தற்போது ஆரஞ்ச் மாவட்டங்களாக இருக்கும் தங்களது மாவட்டத்தினை பச்சை மண்டலமாக மாற்ற வேண்டும் என்று, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.