மாநிலத்தை 'திறக்கும்' நேரம் வந்துவிட்டது... கொரோனாவுடன் 'வாழ' பழகிக்கொள்ள வேண்டும்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 04, 2020 12:02 AM

டெல்லியை திறக்கும் நேரம் வந்துவிட்டது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.

Lockdown 3.0: Time to Reopen Delhi says Arvind Kejriwal

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் தற்போது 3-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் சிவப்பு மண்டலங்களுக்கு எக்கச்சக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதே நேரம் ஆரஞ்ச் மற்றும் பச்சை மண்டலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து உள்ளன.

இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியை திறக்கும் நேரம் வந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கொரோனா நோய்த்தொற்றால் 4,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ''டெல்லியை மீண்டும் திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

கொரோனா வைரஸுடன் வாழ நாம் தயாராக இருக்க வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவதில் மாநில அரசு தயாராக இருக்கிறது. அனைத்து கட்டுப்பாட்டு மண்டலங்களும் சீல் வைக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறேன். தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கலாம். டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக மாற்றுவது வேலையிழப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஊரடங்கால் அரசால் வருமானம் ஈட்ட முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 3500 கோடி வருவாய் ஈட்டுவோம். இந்த ஆண்டு 300 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளோம். இதை வைத்து எப்படி சம்பளம் கொடுப்பது? அரசாங்கத்தை நடத்துவது? நீண்ட நாள்களுக்கு டெல்லியால் இந்த பிரச்சினையை தாங்க முடியாது. அதனால் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஊரடங்கைத் தளர்த்துவதற்கு டெல்லி தயாராக இருக்கிறது,'' என தெரிவித்து இருக்கிறார்.