16 வயசுல இப்டியொரு ‘கண்டுபிடிப்பா’!.. வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா..! இப்போ குடும்ப தொழிலே இதுதான்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பள்ளிக்கூடத்திற்காக மகன் கண்டுபிடித்த ஒரு தொழில்நுட்பத்தை பார்த்து வியந்த அவரது தந்தை, அதனை வியாபாரமாக்க தனது வேலையை உதறி தள்ளியுள்ளார்.

துபாயை சேர்ந்த இந்திய மாணவரான இஷிர் வாத்வா (16 வயது), சுவரில் துளையிடாமல், ஆணி அடிக்காமல் கனமான பொருள்களை காந்தம் மூலமாக தொங்கவிடும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இவர் துபாயில் உள்ள ஜெம்ஸ் வேர்ல்டு அகாடமியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீடுகள், அலுவலங்களில் மின்விசிறி, தொலைக்காட்சி உள்ளிட்ட கனமான மின்சாதனப் பொருட்களை சுவரில் துளையிட்டு மாட்டுவதால் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் நோக்கில், உலோக டேப் மற்றும் காந்தம் ஆகியவற்றின் உதவியுடன் கனமான பொருட்களை சுவரில் மாட்டுவதற்கு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளார்.
சுவரில் துளையிடாமல், ஆணி அடிக்காமல் பொருள்களை தொங்கவிடுவதற்கான சாதனத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என மாணவர் இஷிர் வாத்வா யோசித்துள்ளார். அப்போது அமெரிக்கா பர்டியூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் தன் சகோதரர் அவிக்கிடம் இதுதொடர்பாக ஆலோசனை கேட்டுள்ளார்.
சகோதரர் கொடுத்த ஆலோசனையின்படி உலோக டேப், நியோடைமியம் காந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி கனமான பொருள்களை தாங்கும் தொழில்நுட்பத்தை இஷிர் வாத்வா கண்டுபிடித்துள்ளார். இஷிரின் கண்டுபிடிப்பை கண்டு மகிழ்ச்சியடைந்த அவரது தந்தை சுமேஷ் வாத்வா, உடனே தனது வேலையை உதறிவிட்டு மகனின் கண்டுபிடிப்பை வணிகரீதியாக தயாரிக்கும் தொழிலில் இறங்கியுள்ளார். பள்ளிக்கூடத்திற்காக 10ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் தற்போது அவரது குடும்பத்தின் தொழிலாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்
