72 அடி அகலம்.. அமெரிக்காவுல மீண்டும் திறக்கப்பட்ட "நரகத்துக்கான வழி".. திகைக்க வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உள்ள ஏரி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட உபரி நீர் செல்லும் வழி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஏரி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நபா கவுன்டியில் இருக்கிறது பெர்ரிஸ்ஸா ஏரி. இது மாண்டிசெல்லோ அணையால் உருவாக்கப்பட்டது ஆகும். வடக்கு சான் பிரான்சிஸ்கோ பகுதிக்கு நீர் மற்றும் மின்சாரத்தை இந்த அணை வழங்குகிறது. முந்தைய காலங்களில் இந்த பகுதியில் ஏற்படும் வெள்ள ஆபத்தை தடுக்கும் விதமாகவும், கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை சமாளிக்கும் நோக்கிலும் இந்த அணை கட்டும் திட்டத்தில் இறங்கியது அமெரிக்க அரசு.
நரகத்துக்கான வழி
இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ள வினோத துளையைத்தான் நரகத்துக்கான வழி (Portal To Hell) என்று அந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள். ஏரியில் நீர்மட்டம் அதிகரிப்பது பல்வேறு பாதிப்பை அணைக்கு ஏற்படுத்திய காரணத்தினாலும் உபரி நீரை தேவையான இடத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய காரணத்தினாலும் 1950 களில் இந்த துளை அமைக்கும் பணிகளில் இறங்கியது அரசு.
அதன்படி, நீர்த்தேக்கத்திற்கு அருகே, 72 அடி அகலத்தில் பிரம்மாண்ட துளை அமைக்கப்பட்டு அணையின் நீர்மட்டம் உயரும் போது உபரி நீர் இந்த துளை வழியாக செல்லும் வகையில் இது கடப்பட்டுள்ளது. இந்த துளை வழியாக நீர் பயணிக்கும்போது பிரம்மாண்ட சூழலை உருவாக்கும். இதன் காரணமாகவே, இதனை நரகத்துக்கான வழி என்று மக்கள் அழைக்கிறார்கள்.
அதிகப்படியான நீர்
ஏரியில் 4.7 மீட்டருக்கு மேல் நீர் மட்டம் உயரும் போது, வினாடிக்கு 1,360 கன மீட்டர் தண்ணீரை விழுங்கும் வடிகாலாக இந்த துளை செயல்படுகிறது. 52 பில்லியன் கேலன் நீரைத் தேக்கிவைக்கக்கூடிய இந்த அணையில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், உபரி நீரை வெளியேற்ற துளையை திறந்தனர் அதிகாரிகள்.
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த துளையின் வழியாக, நீர் உட்செல்லுகையில் உருவாகும் சுழல்களை பார்க்க ஏராளமான மக்கள் இந்த நீர்தேக்கத்திற்கு வருகிறார்கள். 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்திற்கு பிறகு, இந்த துளைக்கு அருகே மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.