"இவரை ஏன் இந்திய அணி கண்டுக்கவே இல்ல.. அவர் மாதிரி ஆளுங்க டீமுக்கு வேணும்"..நடராஜனை புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜனை புகழ்ந்துள்ளார் முன்னால் இங்கிலாந்து கேப்டன் மைக்கில் வாகன்.
நடராஜன்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் நடராஜன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதிரடி ஆட்டக்காரரான வெங்கடேஷ் அய்யர் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடராஜன், அதே ஓவரில் ஆல்ரவுண்டரான சுனில் நரைனின் விக்கெட்டை தட்டி தூக்கினார். இதனால் மேட்ச் விறுவிறுப்பாக மாறியது.
3 விக்கெட்டுகள்
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் வந்த வீரர்கள் சுதாரித்துக்கொண்டு அதிரடிகாட்ட அணியின் ஸ்கோர் 175 ஆக உயர்ந்தது. இறுதியில் நிதிஷ் ராணா பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்ட நடராஜனிடம் ஓவர் கொடுக்கப்பட்டது. அதே ஓவரில் ராணாவை பெவிலியனுக்கு அனுப்பினார் நடராஜன்.
நான் மட்டும் செலக்டரா இருந்தா
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் வாகன் நடராஜன் குறித்து பேசுகையில்," இந்திய அணி அவரை (நடராஜனை) ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. அவரைப் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் பக்க பலமாக இருப்பார்கள். நல்ல T20 அணிக்கு நடராஜன் போன்ற ஒரு பவுலர் அவசியம் தேவை. நான் இந்திய கிரிக்கெட் வீரர் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்திருப்பேன்" என்றார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலமாக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் நட்டு.
2021 ஆம் ஆண்டு காயம் காரணமாக பாதியில் விலகிய நடராஜன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை சிதறடித்து வருகிறார். நடப்பு தொடரில் நடராஜன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.