சாலையில் வசித்துவரும் சிறுவனுக்கு ஆசிரியராக மாறிய போலீஸ் அதிகாரி.. பெரிய மனசு சார் உங்களுக்கு.. குவியும் பாராட்டுகள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தாவில் நடைபாதையில் வசித்துவரும் சிறுவனுக்கு அப்பகுதியில் பணிபுரிந்து வரும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஆசிரியராக மாறிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
கொல்கத்தாவில் உள்ள பாலிகங்கே ஐடிஐ கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார் பிரகாஷ் கோஷ். அதே பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் சாலைகளில் விளையாடுவதை அவர் அடிக்கடி பார்த்திருக்கிறார். அந்த சிறுவனின் தாய் சாலையோர உணவுக் கடையில் பணிபுரிந்து வருகிறார். சாலை ஓரத்தில் வசித்து வரும் தாயும் மகனும் மிகுந்த கஷ்டத்தில் இருந்திருக்கின்றனர்.
கல்வி
பொருளாதார சூழல் மோசமாக இருந்த போதிலும் தன்னுடைய மகனை படிக்க வைக்க வேண்டும் என உறுதி எடுத்த அந்த தாய் மிகவும் சிரமப்பட்டு அரசுப் பள்ளி ஒன்றில் அவனை சேர்த்திருக்கிறார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து வீட்டிலேயே வசித்து வந்த அந்த சிறுவன் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்துவது அவனுடைய கல்வியை பாதிப்பதாக கவலை அடைந்திருக்கிறார் சிறுவனின் தாய். அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர் பிரகாஷ் கோஷிடம் இவற்றை கூறி ஏதாவது உதவி செய்யுமாறு கேட்டு உள்ளார் அவர்.
உதவி
சிறுவனின் தாய் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரகாஷ் கோஷ், தன்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக செய்வதாக தெரிவித்திருக்கிறார். அடுத்த நாள் சிறுவனின் வசிப்பிடத்திற்கு வந்த பிரகாஷ் சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க துவங்கியுள்ளார். தனது வேலைக்கு இடையிலும், பணி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போதும் சிறுவனை அமரவைத்து எழுத்துப் பிழைகள், உச்சரிப்பு, கையெழுத்து ஆகியவற்றை கற்பித்து வருகிறார் பிரகாஷ். இதனால் சிறுவனுடைய கல்வியிலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கவனித்த அந்த தாய் போலீஸ் அதிகாரியான பிரகாஷுக்கு நெகிழ்ச்சி பூர்வமாக நன்றி கூறியிருக்கிறார்.
பாராட்டு
இதனிடையே சாலையோர சிறுவனுக்கு பாடம் நடத்திவரும் பிரகாஷின் செயலை கொல்கத்தா காவல்துறை பாராட்டியுள்ளது. போக்குவரத்து காவலர் பணியையும் ஆசிரியர் பொறுப்பையும் சமமாக அவர் கவனித்து வருகிறார் என கொல்கத்தா காவல்துறை பிரகாஷை கௌரவப்படுத்தி உள்ளது.
நடைபாதையில் வசித்துவரும் சிறுவனுக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஆசிரியராக மாறிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.