விமானப் பயணத்தில் தளர்வுகள் அறிவிப்பு!.. என்னென்ன விதிமுறைகள்?.. எந்தெந்த நாடுகள்?.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய ஆசிய பசிபிக் நாடுகளில் சர்வதேச விமானப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் மெல்ல தளரத்தத் தொடங்கியுள்ளன.
ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்நாடுகள் விமானக் கட்டுப்பாடுகளை விலக்கிவருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளில் எல்லைகள் மூடப்பட்டதால், ஆசியாவின் சர்வதேச பயணத்தில் மிகப்பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. ஆகஸ்ட் மாதம் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 97 சதவீதம் அளவுக்கு குறைந்தது என ஆசிய பசிபிக் ஏர்லைன்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஐரோப்பிய நாடுகளில் சர்வதேச விமானப் பயணம் தொடர்பாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பரிசோதனைகள் மற்றும் காப்பீட்டு வசதிகள் இருப்பதால் ஆசிய பசிபிக் நாடுகளில் சிலர் பயணம் செய்ய விரும்புகின்றனர். பயணத்திற்குப் பிறகு தனிமைப்படுத்துதல் என சில தளர்வுகளால் விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறை உற்சாகம் அடைந்துள்ளன.
சிங்கப்பூர் - இந்தோனேசியா நாடுகளுக்கு இடையிலான பயண ஒப்பந்தத்தின்படி, விமானப் பயணத்திற்குப் பிறகும் முன்பும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியமாகிறது. அதேபோல சீனா, தென்கொரியா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது சிங்கப்பூர்.
தனிமைப்படுத்தல் இல்லாமல் நியூசிலாந்து நாட்டுக்காரர்கள் ஆஸ்திரேலியா நாட்டுக்குப் பயணிக்கலாம். மேலும், நியூசவுத் வேல்ஸ், கான்பரா மற்றும் வடக்குப் பிரதேசம் போன்ற பகுதிகளுக்கும் பயணம் செய்யலாம். ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு குறுகியகால வணிகப் பயணங்களை வெளிநாட்டினர் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.