'வெற்றிகரமாக நடந்த 2ம் கட்ட பரிசோதனை'... 'திடீரென பரிசோதனையை நிறுத்திய ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’... அதிர்ச்சி காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்2 கட்டங்களாக நடந்த பரிசோதனை வெற்றி அடைந்த நிலையில், ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனையை நிறுத்தியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா இன்று வரை உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என பலவும் அடியோடு சரிந்து போயுள்ளது. தினம் தினம் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வோடு பொது முடக்கம் அமலில் உள்ளது. இதற்கு எப்படியாவது தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடமாட்டார்களா என பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள், முன்னணி மருந்து நிறுவனங்கள் தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. அந்த வகையில் தடுப்பூசி ஒன்றை அந்நிறுவனம் தயாரித்த நிலையில், அந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனைகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முடித்தது.
அடுத்த கட்டமாக 3-ம் கட்ட பரிசோதனையைக் கடந்த மாதம் இறுதியில் அந்நிறுவனம் தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி பரிசோதனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே 60 ஆயிரம் பேருக்குப் பாதுகாப்பான வகையில் தடுப்பூசி செலுத்தி சோதனை மேற்கொள்ள இருந்த நிலையில், தடுப்பூசி போட்ட ஒருவருக்குப் பக்க விளைவு ஏற்பட்டு அந்த சோதனை தற்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.