'குளிர் காலம் வந்திருச்சு... கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா'?.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஞாயிற்றுக்கிழமைகளில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில், இன்று ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, "SARS Cov 2 சுவாசம் தொடர்பான வைரஸ், எனவே, குளிர் காலத்தில் சுவாசம் தொடர்புடைய வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான்.
சுவாச வைரஸ்கள் குளிர்ச்சியான கால சூழலில், நீண்ட காலம் வாழும் ஆற்றல் படைத்தது. இதில் இன்னொரு விஷயத்தையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. குளிர்காலத்தில், குடியிருப்பு வீடுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் போக்கு உள்ளது. இது வைரஸ் பரவலை அதிகரிக்கும். எனவே, இந்திய சூழலை பொருத்தவரை குளிர்காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயரும் என்று யூகிப்பது தவறானது இல்லை" என்றார்.
மேலும், ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக இங்கிலாந்தில் குளிர்கால தொடக்கத்தில் தொற்று பாதிப்பு உயர்வதை மேற்கோள் காட்டிய ஹர்ஷ்வர்தன், இந்தியாவிலும் குளிர் காலம் தொடங்க உள்ளதால் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது" என்றார்.
டெல்லியில் குளிர் காலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் எண்ணிக்கையை எட்டும் என்று தேசிய நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பண்டிகை காலங்களும் நெருங்கியுள்ளதால், தொற்று பாதிப்பு திடீரென உயர வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
