"இவங்க எப்படி பாஸ் பண்ணாங்க-ன்னு தெரிஞ்சாகணும்".. மாணவர்கள் மீது ஜட்ஜ்க்கு வந்த சந்தேகம்.. விசாரணைல வெளிவந்த பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் காவல்துறையினரிடம் சிக்கிய 4 இந்திய மாணவர்கள் பற்றிய விசாரணை சூடு பிடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள் ஆங்கில தகுதி தேர்வான IELTS எழுதி தேர்ச்சி பெறவேண்டும். இந்நிலையில் அமெரிக்காவில் காவல்துறையினரிடம் சிக்கிய 4 இந்திய மாணவர்கள் ஆங்கிலம் தெரியாமல் தவித்ததால் அவர்கள் எப்படி IELTS தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள்? என்பதை அறிய மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. இதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைது
கனடாவில் படிப்புக்காக சென்ற குஜராத்தை சேர்ந்த 4 இந்திய மாணவர்கள், கடந்த ஆண்டு அமெரிக்க காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கனடா எல்லை அருகே பழுதடைந்த படகில் நான்கு பேரும் சிக்கிய நிலையில், அமெரிக்க காவல்துறையினர் இவர்களை கைது செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில்கூற இவர்கள் மறுத்ததாக தெரிகிறது.
அதன்பிறகு ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடைபெற்றிருக்கிறது. அப்போது, ஆங்கிலம் பேசத் தெரியாமல் எப்படி IELTS தேர்வில் இவர்கள் வெற்றிபெற்றார்கள் என்பது பற்றி விசாரணை நடத்துமாறு நீதிபதி தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இதுகுறித்து குஜராத் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளது. இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணை பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளன.
விசாரணை
இதுபற்றி பேசிய மெஹ்சானா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவின் (SOG) இன்ஸ்பெக்டர் பாவேஷ் ரத்தோட்,"புத்திசாலித்தனமான மாணவர்கள் கூட IELTS இல் 5 அல்லது 6 மதிப்பெண்களை பெற கடினமாக உழைக்க வேண்டும். மெஹ்சானாவின் வெவ்வேறு கிராமங்களில் வசிக்கும் இந்த நான்கு மாணவர்களும் 6.5 முதல் 7 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. இதனால் நாங்கள் சந்தேகமடைந்தோம்" என்றார்.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் இந்த மாணவர்கள் தேர்வு எழுதிய மையத்தில், வெளிப்படைத்தன்மை இல்லாமல் தேர்வுகள் நடைபெற்றதாகவும், குறிப்பாக தேர்வு நேரத்தில் இங்கிருக்கும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, இந்த தேர்வு மையத்தின் பொறுப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.