“திரும்பி வந்துடேன்னு சொல்லு...டிக்டாக் இஸ் பேக்”!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Arunachalam | Apr 30, 2019 11:08 AM
தடை நீக்கப்பட்டதால் டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். இதனிடையே டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கியது.
இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், டிக்டாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி டிக்டாக் நிறுவனத்தின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக்டாக் செயலி மீதான தடையை நீக்கியது. இந்நிலையில், தடை நீக்கப்பட்டதால் டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.