முதல்முறையாக குடும்பத்தை சேர்த்து வைத்த டிக்டாக்.. எப்படி தெரியுமா?
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Feb 26, 2019 04:58 PM
ஊருக்குள் எவ்வளவோ பேருக்கு இடைஞ்சலாக இருக்கும் டிக்டாக் ஒரு இளம் பெண்ணை தன் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக வீட்டு உறவுகளை பிரிந்து வெளியே சென்று வாழ்ந்துள்ள பெண், தனது குடிம்பத்தாரின் டிக்டாக் வீடியோவைப் பார்த்துவிட்டு அவர்களுடன் இணைந்திருக்கிறார். தங்களது வீட்டின் மைனர் பெண் ஒருவரை காணவில்லை என்று ஒரு குடும்பத்தினர் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தனர். ஆனால் அந்த பெண் 2018-ஆம் ஆண்டு வந்த பின்னும் கிடைக்காததால் அவ்வழக்கு ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறியுள்ளது.
காணாமல் போன பெண்ணுக்கு அக்காவும், மாமாவும் உள்ளனர். அவர்கள் இருவரும் டிக்டாக்கில் போஜ்பூரி பாட்டுக்கு நடனமாடி டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். இந்த அந்த காணாமல் போன இளம் பெண் பேஸ்புக்கில் பார்த்துள்ளார். பின்னர் தனது அக்கா கணவருக்கு வேறு ஒரு போலியான பேஸ்புக் ஐடியில் இருந்து நட்பு அழைப்பு கொடுத்து இணைந்துள்ளார். பின்பு மாமாவிடம் தனது அக்கா பற்றியும் வீட்டில் இருந்த அனைவர் பற்றியும் விசாரித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அக்கா கணவர் தன் குடும்பத்தாரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸாரிடம் இந்த தகவலை சொல்லிவிட்டு, ஒரு சமயம் பார்த்து அந்த இளம் பெண்ணுக்கு பேஸ்புக்கில் வீடியோ கால் செய்து அப்பெண்ணின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்பெண்ணின் அக்கா கணவர் கூறியுள்ளார். அப்போது பதில் பேசிய அந்த பெண்ணை கண்டுபிடித்தும் விட்டார். இதனை அடுத்து அந்த பெண்ணை அழைத்துள்ளார். அந்த பெண்ணும் தானேவில் உள்ள சராய் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது போலீஸார் அப்பெண்ணை வளைத்து பிடித்துள்ளனர்.
ஆனால் அந்த பெண்ணோ தான் விருப்பத்தின்பேரில் வீட்டை விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார். பின்னர் போலீஸார் விசாரித்தபோது, அந்த பெண் 9-ஆம் வகுப்புக்கு பின், மும்பையில் இருந்த தனது அக்காவுடன் இருக்க விருப்பம் கொண்டதாகவும் ஆனால் அப்பெண்ணின் அம்மா அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் அந்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி தோழிகளைச் சேர்த்துக்கொண்டு ஒரு வேலையில் சேர்ந்து, பணியிடத்தில் ஒருவரைப் பார்த்து தனது 18-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் அப்போது தனது அக்கா-மாமாவின் டிக்-டாக் வீடியோவைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு குடும்பத்தாரை பார்க்க ஆசை வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். டிக்டாக் குடும்பத்தை சேர்த்தும் வைக்கும் என்பதற்கு இந்த கதை சாட்சி.