“7 மாசமா வெயிட் பண்ணிட்டோம்!.. இப்ப வேற வழி இல்ல”.. ‘டிக்டாக்’ செயலியின் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய பரபரப்பு மெயில்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்திய அரசு விதித்த பல்வேறு தடை மற்றும் கட்டுப்பாடுகளை அடுத்து டிக்டாக் செயலியை நடத்தக்கூடிய சீனா நாட்டை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன் இந்தியாவின் அனைத்து வர்த்தகங்களையும் இந்த நிறுவனம் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கிழக்கில் லடாக் எல்லையில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையேயான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சீனாவின் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடுமையான காட்டத்தை காட்டத் தொடங்கியது.
அதன்படி இந்தியர்களின் சுயவிபரங்கள், தனித் தகவல்களை பெறக்கூடிய சீனாவின் செயலிகள் மீது தொடர் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் டிக்டாக். ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதன் பின்னர் ஜூலை மாதத்தில் மேலும் 50 சீன செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளின் செயல்பாட்டை மத்திய அரசு நிறுத்தியது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை உலகம் முழுக்க வியந்து பார்த்தனர். இந்நிலையில் இந்தியாவில் மத்திய அரசின் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட விருப்பம் இருப்பதாக அந்த நேரத்தில் டிக்டாக் செயலியை நடத்தும் பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
எனினும் கடந்த 7 மாதங்களாக மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான பச்சைக் கொடியும் காட்டப்படவில்லை என்பதால் வேறு வழியின்றி தங்கள் வர்த்தகத்தை இந்தியாவில் முடித்துக் கொள்வதற்கு பைட் டான்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாகின் இடைக்கால தலைவர், உலக வர்த்தக தலைவர் இருவரும் சேர்ந்து அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் வர்த்தகத்தை இந்தியாவில் முடித்துக் கொள்வதாகவும் பெயரளவுக்கு மட்டுமே நிறுவனத்தை நடத்த தற்போதைக்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஊழியர்களின் அளவை குறைத்துக் கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த முடிவு இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சீன வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவில் மீண்டும் பைட் டான்ஸ் நிறுவனம் வருவதற்கு சாத்தியம் அற்ற தன்மை நிலவும் என்பதை உறுதியாக்கியுள்ளது.
இதுகுறித்து டிக்டாக் செய்தி தொடர்பாளர் கூறும் பொழுது, “கடந்த 2020 ஜூன் 29ஆம் தேதி இந்திய அரசு பிறப்பித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை நடத்த விருப்பம் இருப்பதாக தெரிவித்தோம். ஆனால் ஏழு மாதங்களாக இந்திய அரசிடமிருந்து எந்தவிதமான வழிகாட்டலும் வெளிப்படவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாக இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கி விட்டு 2000 பேரையும் வேலை விட்டு நீக்குவதும், நிறுவனத்தை மூடுவதும் வருத்தமாக தான் இருக்கிறது. எனினும் வேறு வழியில்லை என்பதால் ஊழியர்களை குறைக்கிறோம்.
லட்சக்கணக்கான பயணிகள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோரின் ஆதரவோடு செயல்பட்டுவந்த டிக்டாக் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பு ஒரு வேளை இருந்தால் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டும் இந்த தடை நீடிக்கிறது!” என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
