'தவறுதலாக தொலைந்த பாஸ்போர்ட்'... 'அதுக்காக 18 வருடம் சிறை'... பல கொடுமைகளை கடந்து வந்த சிங்கப்பெண்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்ற நிலையில், தற்போது தான் இந்தியா திரும்பியுள்ளார். தான் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வர இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என கனவில் கூட அந்த பெண்மணி நினைத்து பார்த்திருக்க மாட்டார். இதற்கான காரணம் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
இந்தியாவின் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த ஹசீனா என்ற பெண்மணி, உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்புர் பகுதியை சேர்ந்த தில்ஷாத் அஹமது என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவரின் உறவினரைக் காண வேண்டி ஹசீனா பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அப்போது லாகூர் பகுதியில் வைத்து ஹசீனாவின் பாஸ்போர்ட் தொலைந்து போயுள்ளது. இதனால் பாகிஸ்தான் போலீசார் அவரை பலவந்தமாக சிறையில் அடைத்துள்ளனர். தான் ஒரு நிரபராதி என்றும், தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தனது கோரிக்கையை ஹசீனா முன் வைத்தார். இருந்த போதும், அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை விடுவிக்க மறுத்துள்ளனர்.
இதனிடையே, அவுரங்காபாத்திலுள்ள ஹசீனாவின் உறவினர்கள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஹசீனா காணாமல் போனது குறித்து புகாரளித்துள்ளனர். அதன்பிறகு, அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம், ஹசீனா இந்தியாவின் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் என்று கூறி அதற்கான சாட்சியங்களை அனுப்பியுள்ளனர். அதன் பின்னரே ஹசீனாவை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, 18 ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறைத் தண்டனை அனுபவித்து இந்தியா திரும்பிய ஹசீனாவை அவரது உறவினர்கள் மற்றும் அவுரங்காபாத் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா திரும்பியது குறித்து பேசிய ஹசீனா, 'நான் பாகிஸ்தானில் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். தற்போது எனது நாட்டிற்கு திரும்பிய பிறகு தான் நிம்மதியாகவும், சொர்க்கத்தில் இருப்பதை போன்றும் உணர்கிறேன். பாகிஸ்தானில் நான் வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டேன். அவுரங்காபாத் போலீசாருக்கு நன்றி' என கூறியுள்ளார்.