டிராகன் இது சீனா'ல ... அப்போ பேர மாத்துறதுதான்... இது 'இவங்க கட்சி' பேருமாதிரி இருக்கே... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு...
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவுடன் தொடர்புடைய பெயர் இருப்பதாக கூறி டிராகன் ஃப்ரூட்டின் பெயரையே குஜராத் அரசு மாற்றியுள்ளது.
டிராகன் ஃப்ரூட் பழம் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதைத்தவிர, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இந்த பழம் அதிகம் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
சமீபமாக அதிகம் பிரபலமாகி வரும் இந்தப் பழத்தின் பெயரை குஜராத் அரசு மாற்றியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, "டிராகன் பழத்தின் பெயரை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பழத்தின் பெயர் சீனாவுடன் தொடர்புடையதாக இருப்பதால் அதன் பெயரை நாங்கள் மாற்றியுள்ளோம். இந்தப் பழம் பார்ப்பதற்கு தாமரை வடிவில் இருப்பதால், இதற்கு ‘கமலம்’ என்று மறுபெயரிடப்பட உள்ளது. குஜராத் மாநில அரசு இந்தப் பழத்தின் மறுபெயருக்குக் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சின்னமான தாமரையின் சமஸ்கிருத பெயரான கமலம் என்பதைப் பழத்திற்குச் சூட்டியுள்ளது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் ஆர்வம் காட்டிவந்த அரசு, தற்போது பழங்களின் பெயர்களை மாற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.