'253 நாட்களா இல்லாம இருந்துச்சு!'... 'திடீரென உள்ளூர் பெண்ணுக்கு வந்த கொரோனா?!!'... 'அடுத்தடுத்து விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டுகள் ஆகியும் இன்னும் உலக நாடுகள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன.

தென்சீன கடல்பரப்பில் தீவுக்கூட்டங்களுடன் அமைந்துள்ள நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நாட்டில் வைரஸ் பரவலைக் குறைத்து உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. அந்நாட்டில் மொத்தமாக இதுவரை 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதிக்கு பின்னர் அங்கு யாருக்குமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே, வைரஸ் பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகளுடன் வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து அங்கு அனுமதிக்கப்பட, தைவான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் கடந்த 12ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து அங்கு வந்துள்ளது. அந்த விமானத்தில் நியூசிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த 2 பேர் விமானிகளாக பணியாற்றி வந்த நிலையில், அவர்களில் நியூசிலாந்தை சேர்ந்த விமானி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாததால் அவருக்கு சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தைவான் வந்தடைந்த பின்னரும் நியூசிலாந்து விமானி தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் தகவலை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்ததுடன், அவர் தைவானின் பல்வேறு சந்தைபகுதிகளுக்கும் சென்றுள்ளார். இந்த சூழலில் தைவானில் உள்நாட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது விசாரணையில், அந்த பெண் தைவான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானியை சமீபத்தில் சந்தித்தது தெரியவர, அந்த விமானிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவருடன் பணியாற்றிவந்த சக ஊழியரான ஜப்பான் விமானிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வரும்போதே கொரோனா அறிகுறிகள் இருந்ததை மறைத்த அந்த விமானிக்கு 10 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறியதாகவும், நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதற்காவும் அந்த விமானியை தைவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. தைவானில் 253 நாட்களுக்கு பின்னர் உள்ளூர் நபரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த இரண்டு விமானிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
