காதலிக்கு 'காதலர் தின' GIFT கொடுக்க இளைஞர் செய்த தகிடுதத்தம்.. கையோடு போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் அருகே காதலிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆடுகளை திருடி விற்க முயன்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள். காதலர்கள் தங்களுடைய அன்பை பிரதிபலிக்கும் நாளாக உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சூழ்நிலையில் விழுப்புரம் அருகே விநோத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ரேணுகா. பண்ணை அமைத்து ஏராளமான ஆடுகளை இவர் வளர்த்து வருகிறார். நேற்றுமுன் தினம் இரவில் திடீரென ஆடுகள் சத்தமிட, வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்திருக்கிறார் ரேணுகா. அப்போது இரண்டு இளைஞர்கள் ஆடு ஒன்றை தூக்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகா கூச்சலிட்டு இருக்கிறார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இரு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து இருக்கின்றனர். அப்போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் மற்றும் மோகன் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அங்கிருந்து அவர்கள் இருவரையும் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் பொதுமக்கள். இது தொடர்பாக இரண்டு இளைஞர்களிடமும் கண்டாச்சிபுரம் காவல் நிலைய அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அரவிந்த் குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் காதலர் தினத்திற்காக பரிசு வாங்க பணம் இல்லாததால் ஆடுகளைத் திருடி விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் இருவரும் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த பகுதியில் சமீபத்தில் அடிக்கடி ஆடு திருடு போன சம்பவங்கள் நடைபெற்றதால் அதற்கும் இந்த இளைஞர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலிக்கு காதலர் தின பரிசு வாங்க ஆடு திருடச் சென்ற இளைஞர் கைதான சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | இவருக்கு அங்கீகாரம் கிடைக்கணும்.. இளைஞரின் வித்தியாசமான முயற்சி.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!

மற்ற செய்திகள்
