'தாய், பாட்டிக்கு கொரோனா'... 'கண்முன்னே உயிரிழந்த தந்தை'... 'செய்வதறியாது தனியாக தவித்த சிறுவனின்'... 'நெஞ்சை உருக்கும் சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்11 வயது சிறுவனின் தாய் மற்றும் பாட்டி கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த தந்தையின் உடலை அடக்க செய்யமுடியாமல் தனியாக சிறுவன் தவித்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகிலுள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (35). பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டதால், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அய்யனாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடையவே, கடந்த 7-ம் தேதி, மருத்துவர்கள் அவரை ஊருக்கு அனுப்பிவைத்தனர்.
வீடு திரும்பிய அவர் உயிருக்கு போராடும் நிலைக்கு ஆளானார். அவரின் மனைவி மற்றும் தாய் இருவரும் கவனித்து வந்த சூழலில், வெள்ளிக்கிழமை மாலை அன்று, இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி, சுகாதாரத்துறை அலுவலர்கள் அவர்களை அழைத்துச் சென்று, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர்.
வீட்டில் இருந்த அய்யனாரின் அருகே, அவரது 11 வயது மகன் ஜீவா மட்டுமே இருக்க, உதவிக்கு யாரும் இல்லாததால், சில நிமிடங்களிலேயே அய்யனாரின் உயிர் பிரிந்தது. தன் கண் முன்னே தந்தை உயிர் பிரிந்ததை கண்டு செய்வதறியாமல் திகைத்த சிறுவன், உடலை அடக்கம் செய்யவேண்டி உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளான். ஆனால் கொரோனா காரணமாக உதவி செய்ய ஒருவர் கூட முன்வராத சூழ்நிலையில், தந்தையின் உடல் அருகிலேயே சோகத்துடன் அமர்ந்துள்ளான் சிறுவன் ஜீவா.
இந்நிலையில், இத்துயரச் சம்பவம் குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில் கண்டாச்சிபுரம் தாசில்தார் பார்த்திபன் அய்யனாரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். அப்போது அங்கு வந்த மாவட்டக் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் உறவினர்கள் அளித்த கோரிக்கையின் பேரில், அரசு மருத்துவமனையில் இருந்து, அய்யனாரின் தாய் மற்றும் மனைவியை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர்.
பின்னர் முழு உடல் பாதுகாப்பு கவசங்களுடன் வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள், அய்யனாரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இதனை கண்ணீர் மல்க தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, திரும்பவும் அய்யனாரின் தாய் மற்றும் மனைவி மருத்துவமனைக்கு சென்றனர். அதன்பிறகு காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அந்த சிறுவனுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். தந்தை மரணம் ஒருபுறம், தாய், பாட்டிக்கு கொரோனா நோய் தொற்று மறுபுறம் என்று தனிமரமாய் தவிக்கும் சிறுவன் ஜீவாவின் கண்களில் படர்ந்துள்ள சோகம், காண்பவர்களை கலங்கச் செய்துள்ளது.