"நண்பன்னு நம்பி அழைப்பிதழ் கொடுக்க போன இளைஞர்".. கொலை வழக்கு தீர்ப்பில் பரபரப்பு திருப்பம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பர்கள் என நம்பி திருமண அழைப்பிதழ் கொண்டு சென்று கொடுக்கவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு திருப்பமாக புதிய தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் ராஜன். இவரும் அவருடைய தம்பி அரங்கநாதன் இரண்டு பேரும் குவைத்தில் பணிபுரிந்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஊரில் அரங்கநாதனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தம்பிக்கு திருமணம் என்பதால் விமர்சையாக அதை செய்வதற்கு ஊருக்கு வந்திருந்தார் அவருடைய அண்ணன் ராஜன். சொந்தக்காரர்கள், நண்பர்கள் என பலருக்கும் தேடி தேடிச் சென்று தம்பியின் திருமணத்துக்கு பத்திரிக்கை வைத்திருக்கிறார் ராஜன். அந்த வகையில் திருச்சியில் உள்ள நண்பர்களை கூட மிஸ் பண்ணிவிடக்கூடாது என்பதற்காக பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு சென்று நேரில் திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் ராஜன்.
திருச்சியில் நண்பர்களிடம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு குவைத்தில் இருந்து வரும் தம்பியை அழைத்து வர வேண்டும் என்று தன் வீட்டில் சொல்லிவிட்டு காரில் சென்றுள்ளார் ராஜன். அதன் பேரில் திருச்சிக்கு சென்ற ராஜன் தன்னுடைய நண்பர்கள் வினோத்குமார் மற்றும் சரவணன் ஆகியோரை சந்தித்திருக்கிறார். அவர்களிடம் தன்னுடைய தம்பி திருமணம் பற்றி குறிப்பிட்டு அவர்களிடம் தவறாமல் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ராஜனும் சரவணனும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருக்கின்றனர்.
அதன் பின்னர் பெட்டவாய்த்தலை தென்னந்தோப்பில் ராஜன் கொலை செய்யப்பட்டு கிடந்திருந்தார். இதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரித்த போலீசார் சரவணனை கைது செய்தனர். அப்போதுதான் ராஜனிடம் இருந்த தங்க செயின், அவருடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவை மீது ஆசைப்பட்ட சரவணன், தன்னுடைய நண்பன் ராஜனை கொலை செய்துவிட்டு அங்கிருந்து அவருடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு புதுச்சேரிக்கு தப்பி சென்றிருக்கிறார். பின்னர் புதுச்சேரியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சரவணன் தங்கி இருக்கிறார் என்கிற விஷயம் போலீஸாருக்கு தெரிய வந்தது.
2008-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்ய, வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதனை அடுத்து திருச்சி நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு சரவணனுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இந்த தண்டனையை ரத்து செய்ய கோரி சரவணன் தரப்பில் இருந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு, கொலையை நேரில் பார்த்த சாட்சியும் இல்லை என்றாலும் கூட, குற்றவியல் வழக்கில் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் சாட்சியத்தில் சம்பவத்தின் தொடர்ச்சி வலுவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் வேறு ஆதாரங்கள் எதுவுமே தேவையில்லை, எனக் கூறி மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய அந்த ஆயுள் தண்டனையே உறுதி செய்யப்படுவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்லி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.