தமிழகத்தையே உலுக்கிய கச்சநத்தம் வழக்கு.. 27 பேருக்கும் ஒரே தண்டனை.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தையே உலுக்கிய கச்ச நத்தம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றம்.
கச்ச நத்தம்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி அன்று கிராம கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த கும்பல் திருவிழாவில் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஆறுமுகம் (வயது 65), சண்முகநாதன்(31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரான தனசேகரன் (32) என்பவர் சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவர் தலைமறைவானார். 3 பேர் விசாரணை நடைபெற்ற கால இடைவெளியில் இறந்துவிட்டனர். மேலும், 3 பேர் சிறுவர்களாக இருந்ததால் 27 பேர் மீதான வழக்கு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தீர்ப்பு
சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த 27 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி 27 பேருமே குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக அறிவித்தார் நீதிபதி.
தமிழகத்தையே உலுக்கிய கச்ச நத்தம் படுகொலை வழக்கில் இன்று தண்டனை விபரங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.