கடினமான தோல், கூர்மையான பற்கள், முதலை தலை..!- நாகை மீனவர்களிடம் சிக்கிய அரிய வகை மீன்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடினமான தோல், முதலை தலை, பிளந்த வாயில் கூர்மையான பற்கள் எனப் பார்க்க முதலை போன்றே இருக்கும் மீன் ஒன்று நாகை மீனவர்கள் வலையில் சிக்கியது.
இந்த அரிய வகை முதலை மீன் நாகை மீனவர் வலையில் சிக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர் ஒருவர் நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று உள்ளார்.
அந்த மீனவர் மீன்பிடியில் ஈடுபட்டு இருந்த போது வலையில் பல மீன்கள் சிக்கி இருந்துள்ளன. படகில் எடுத்துப் போட்டு பார்க்கும் போது தான் முதலை போன்று ஒன்று தெரிந்துள்ளது. முதலில் முதலை குட்டி ஒன்று தான் வலையில் சிக்கியுள்ளதாக அந்த மீனவர் நினைத்துள்ளார்.
பின்னர் தான் அது அச்சு அசல் முதலை போன்றே தோற்றம் கொண்ட ஒரு வகை அரிய மீன் என்பது அந்த மீனவருக்குப் புலப்பட்டது. அந்த முதலை மீனின் தலை அப்படியே முதலையின் தோற்றத்தையே கொண்டுள்ளது. அதன் வாய் பகுதி முதலையின் போலவே அகண்டு, கூர்மையான பற்கள் உடன் காட்சி அளித்தது.
அந்த மீனின் தோல் பார்ப்பதற்கு மீன் போன்று இருந்தாலும் முதலை போன்று மிகவும் கடினமானதாக இருப்பதாக மீனவர் கூறுகிறார். இந்த முதலை மீன் சுமார் 3 அடி நீளமும் 10 கிலோ எடையும் கொண்டு இருந்தது. இந்த அரிய வகை மீனை அந்த மீனவர் துறைமுகத்துக்கு எடுத்து வந்தார்.
சக மீனவர்கள் பலரும் அந்த முதலை மீனை மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். மீன் வாங்க வந்த பொது மக்களும் ஆச்சர்யத்துடன் முதலை மீனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதிக கனமான மீன் சிக்கியது என மீனவர் உற்சாகத்துடன் இருந்தாலும் அங்கு கூடியிருந்த சிலர் இது நிச்சயமாக மீன் ஆக இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.
மீனவர்களுள் பலரும் இந்த வகை அரிய மீனை தற்போது தான் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். வேடிக்கை பார்த்த மக்களும் இன்னும் இயற்கை என்னென்ன அதிசயத்தை தனக்குள் வைத்திருக்கிறதோ என ஆச்சர்யமும் அதிசயமும் கலந்து பேசிச் சென்றனர்.