கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. சிறப்புகள் விவரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Rahini Aathma Vendi M | Dec 16, 2021 03:28 PM

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்குக் கீழ் உள்ள இடங்களில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

mk stalin inaugurates Chennai kathipara urban square

இதுகுறித்து இன்று தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் ஸ்டாலின் இன்று (16.12.2021) சென்னை, கத்திப்பாராவில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் இளைப்பாறிச் செல்லும் வகையிலும், கத்திப்பாரா மேம்பாலத்திற்குக் கீழ் உள்ள இடங்களில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

கத்திப்பாரா சந்திப்பு சென்னை நகரின் குறிப்பிடத்தக்கபெரிய அடையாளங்களில் ஒன்றாகவும், சென்னை நகரின் நுழைவாயிலாகவும் அறியப்படுகிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இம்மேம்பாலம் கலைஞரால் 2008-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

mk stalin inaugurates Chennai kathipara urban square

ஆசியாவிலேயே மிகப்பெரிய குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய மேம்பாலமாக இருப்பதால் பூங்கா மற்றும் சிறார் விளையாடுமிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய நகர்ப்புறச் சதுக்கமாக 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது.

கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், அனைத்துப் பெரிய சாலைகளுடனும், வடக்கில் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ நிலையம், தெற்கில் ஆலந்தூர் மெட்ரோ நிலையம் மற்றும் கிழக்கில் கிண்டி மெட்ரோ நிலையம் ஆகிய மெட்ரோ நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடம் நகரப் போக்குவரத்துடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், நகர்ப்புறச் சதுக்கத்தில் தற்போது யு-திருப்பம் (U-turn) மேற்கொள்ள முடியும்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் ஒரு மைல் கல்லாக கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கும் சந்திப்பின் இடையே இளைப்பாறும் பகுதியாக அமைந்துள்ளதுடன் நகரத்தின் இதுமாதிரியான இடங்களில் இதுவே முதலாவதாகும்.

நகர்ப்புறச் சதுக்கத்தின் வடிவமைப்பு நவீன சென்னையின் அடையாளத்தையும், கலாச்சாரப் பெருமையையும் பிரதிபலிக்கிறது. மேலும், கைவினைப் பொருள் அங்காடி, உணவுக்கூடம், பசுமைப் பகுதியுடன் கூடிய சிறார் விளையாடுமிடம் ஆகியவையும், 128 சீருந்துகள் மற்றும் 340 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்தங்கள் மற்றும் 8 பேருந்து நிறுத்தங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

mk stalin inaugurates Chennai kathipara urban square

குளோவர் இலை வடிவமைப்புப் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ளதால், இந்த இடம் இயற்கையாகவே 4 பகுதிகளாகப் பிரித்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

பகுதி 1: விமான நிலைய அணுகு பகுதி: (நேரு சிலை அருகில்) இருக்கையுடன் கூடிய உணவுக் கூடங்கள், சில்லறை அங்காடிகள், பேருந்து நிறுத்தம் மற்றும் வாகன நிறுத்தம்.

பகுதி 2: போரூர் அணுகு பகுதி: சிறார் விளையாடுமிடம், சில்லறை அங்காடிகள், பேருந்து நிறுத்தம் மற்றும் வாகன நிறுத்தம்.

பகுதி 3: ஈக்காட்டுத்தாங்கல் அணுகு பகுதி: சில்லறை அங்காடிகள் மற்றும் பேருந்து நிறுத்தம்.

பகுதி 4: மொத்தமாகப் புல்வெளியுடன் மேம்படுத்தப்பட்ட பகுதி

இந்த அனைத்துப் பகுதிகளும் சோலார் விளக்குகள், புல்வெளி விளக்குகள் மற்றும் அதிக வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், சென்னை பெருநகர மக்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்துள்ளது'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags : #KATHIPARA URBAN SQUARE #MK STALIN #CHENNAI #கத்திபாரா #ஸ்டாலின் #சென்னை #கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mk stalin inaugurates Chennai kathipara urban square | Tamil Nadu News.