'வியாபாரம் இல்லாமல் தவித்த பாட்டிம்மா'.. திக்குமுக்காட வைத்த கலெக்டர்! மனச உருக வச்ச வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வயதான பாட்டி ஒருவருக்கு உதவிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குறை தீர்ப்பு கூட்டம்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மக்கள் குழு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் அந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளையும் தேவைகளையும் மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பார்கள். மேலும் தங்களுடைய பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்கள் இந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம். அந்த வகையில் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.
கனிவு காட்டிய ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கே வந்த ஆட்சியர் செந்தில் ராஜ் மாற்றுத் திறனாளிகளின் மனுக்களை பெற்று அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே பணியாரம் உள்ளிட்ட பலகாரங்களை விற்றுக்கொண்டிருந்த வயதான பாட்டி ஒருவரை பார்த்திருக்கிறார் ஆட்சியர். உடனடியாக அவர் அருகே சென்ற அவர் 'உங்களுக்கு மாதாமாதம் முதியோருக்கான உதவித் தொகை சரியாக வருகிறதா?" என கனிவுடன் விசாரித்தார்.
அதற்கு பதில் அளித்த அந்த பாட்டி "பணம் சரியாக கிடைக்கிறது" என கூறினார். மேலும் அந்தப் பாட்டி குறித்து விசாரித்த ஆட்சியரிடம் தான் பணியாரம் உள்ளிட்ட பலகாரங்களை தயார் செய்து விற்பனை செய்து வருவதாகவும் அதன் மூலம் கிடைக்கும் பணமே தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருப்பதாகவும் அந்த பாட்டி தெரிவித்திருக்கிறார்.
மொத்தம் எவ்வளவு?
80 வயதை கடந்த பிறகும் உழைக்க வேண்டும் என முடிவெடுத்து பலகாரங்களை விற்பனை செய்துவரும் பாட்டியை கலெக்டர் பாராட்டியதோடு அவரிடம் இருந்த அனைத்து பலகாரங்களையும் தானே வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். மொத்தம் உங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கவேண்டும் எனக்கேட்டு ரூபாய் 200 க்கு அனைத்து பலகாரங்களையும் ஆட்சியர் வாங்கினார்.
அங்குள்ள அதிகாரிகள் அனைவருக்கும் இந்த பலகாரத்தை கொடுக்குமாறும் கலெக்டர் சொல்லவே அனைவருக்கும் பலகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து பலகாரங்களையும் வாங்கிக் கொண்டதற்காக கலெக்டருக்கு அந்த பாட்டி நன்றி தெரிவித்திருக்கிறார்.
வயதான மூதாட்டி ஒருவரிடம் கனிவுடன் பேசி அவருக்கு உதவி செய்த கலெக்டரின் செயல் அங்கிருந்த மக்களை நெகிழ வைத்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வயதான பாட்டிக்கு உதவி செய்த கலெக்டரை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8