'இந்தியாவின் காப்பர் தேவை எந்த அளவுக்கு இருக்கு தெரியுமா'?.. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க... உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் காரசார விவாதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.எஃப்.நரிமன், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆலை நிர்வாகம் சார்பில் வாதங்களை முன்வைக்க 20 நிமிடம் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, "இந்தியாவின் காப்பர் தேவையின் 36 சதவிகிதத்தை தற்பொழுது மூடப்பட்டுள்ள ஆலைதான் கொடுத்து வந்தது. இந்த ஆலை மூடப்பட்டு உள்ளதால் தற்போது நாம் வெளிநாடுகளிலிருந்து காப்பரை இறக்குமதி செய்ய வேண்டிய இடத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
ஆலையில் பணிபுரியக்கூடிய 4 ஆயிரம் பேரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்காவது ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி வழங்க வேண்டும்" என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், "சென்னை உயர் நீதிமன்றம் நீதியின் அடிப்படை கொள்கையின்படி ஆலையை மூடும் உத்தரவை பிறப்பிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து மனுதாரர்களின் வாதங்களையும் விரிவாக கேட்டது. ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது" என்றும் வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது.
அத்துடன், "அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஆலை செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்திருக்கக் கூடிய பகுதியின் உள்ள காற்றின் அளவு தேசிய காற்று தர நிர்ணய அமைப்பின் தரக்குறியீடு டன் சமமாக உள்ளது. அதாவது ஆலையால் எந்தவித காற்று மாசுபாடு ஏற்படவில்லை என்பது இதன் மூலம் உறுதிப் படுகின்றது" என வேதாந்தா நிறுவனம் வாதத்தில் தெரிவித்தது.
ஆனால், தற்காலிகமாக ஆலையை திறக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
