TNPSC வெளியிட்டது புதிய பாடத்திட்டமே கிடையாது!- குரூப் தேர்வு எழுதுவோருக்கு புது அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்TNPSC சார்பில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது பாடத்திட்டம் இல்லை என இன்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் இனி வரும் காலங்களில் தமிழ் மொழித் தாளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு முறையாக வெளியிட்டு இருந்தது.
இதை அடிப்படையாகக் கொண்ட கடந்த 23-ம் தேதி TNPSC சார்பில் பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் மாதிரி வெளியிடப்பட்டு இருந்தது. TNPSC சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகள் பல்வேறு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படுகின்றன. கொரோனா பாதிப்புகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு TNPSC தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து 2022-ம் ஆண்டு குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வருகிற 2022 பிப்ரவர், மார்ச் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in தளத்தில் மாதிரி வினாத்தாள்கள் உட்பட பாடத்திட்டமும் வெளியிடப்பட்டு இருந்தது. திருத்தப்பட்ட பாடத்திட்டம் என்பதால் TNPSC தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்ய தயாராகினர்.
இந்த சூழலில் டிசம்பர் 23-ம் தேதி TNPSC தளத்தில் வெளியானது புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் இல்லை என TNPSC தெளிவுபடுத்தி உள்ளது. இதுவரையில் TNPSC சார்பில் எந்தவொரு பாடத்திட்டமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி தளத்தில் வெளியானது புதிய பாடத்திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பதற்கான உதாரணம் மட்டுமே என TNPSC அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதனால், மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க தளத்தில் வெளியான உதாரண பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்களை TNPSC நீக்கி உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியில் தமிழர்களுக்கே அரசு வேலைகளில் இடம் கிடைக்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட முயற்சியில் தமிழ் மொழியில் புலமை இருந்தால் மட்டுமே இனி பணி கிடைக்கும். இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.