'தமிழக முதல்வர் தொடங்கி வைத்த...' 'ஏராளமான மக்கள் நலத்திட்ட உதவிகள்...' - நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இன்று (24-08-2020) இந்திய குடிமை பணிகளில் வென்றவர்களுக்கு 'ரக்ஷா பதக்' என்ற விருதினை வழங்கியதுடன் மட்டுமல்லாமல், ஏனைய பல மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்வுகளை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் மதுரையை சேர்ந்த செல்வி மு. பூரண சுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த திரு D.பால நாகேந்திரன் ஆகிய இருவரையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கு நினைவு பரிசையும் வழங்கியுள்ளார்.
இவர்களுடன் சேர்த்து, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் மேலையூர் கிராமத்தில் ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளை தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய திரு R.ஸ்ரீதர் என்பவருக்கு வீரதீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டிற்கான ஜீவன் 'ரக்ஷா பதக்' என்ற விருதினை வழங்கினார். மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செக்கையும் வழங்கி பாராட்டியுள்ளார்.
மேலும் இன்று 24.8.2020 கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் ரூ.95 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மையக் கட்டடம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில், காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், தொல்லியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் – முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020' அறிக்கையினையும் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையானது, தொல்லியல் துறையின் மூலம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்த விவரங்களை தொல்லியல் ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 2018-2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபடி, மதுரை, திருப்பரங்குன்றம் வட்டம், பசுமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில், நான்கு வகுப்பறைகள், கல்லூரி முதல்வருக்கான அறை, அலுவலக அறை மற்றும் இசைக்கருவிகள் வைப்பதற்கான அறை போன்றவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மையக் கட்டடம் ஆகியவற்றையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் இன்று(24-08-2020) திறந்து வைத்துள்ளார்.
முதமைச்சர் காணொளி வாயிலாக கலந்து கொண்ட இந்த நிகழ்வுகளில், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. விக்ரம் கபூர், இ.ஆ.ப., தொல்லியல் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் திருமதி வ. கலைஅரசி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.