'சர்ச்சைக்குரிய வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்'... 'திடீரென பரபரப்பான தமிழக அரசியல் களம்'... துணை முதல்வரை 10 அமைச்சர்கள் சந்தித்ததன் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசியல் களம் திடீரென பரபரப்பானது. சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரின் வீட்டில் 10 அமைச்சர்கள் சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுகவில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தலுக்குப் பிறகு அதிமுக எம்.எல்,ஏ-க்கள் கூடி முதலமைச்சரைத் தேர்வு செய்வார்கள் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி அதிமுக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்தே அன்றி, அதிமுகவின் கருத்து இல்லை என்று கூறியிருந்தார். மேலும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரைக் கட்சி மேலிடம் முடிவெடுத்து அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமாரும் . உரிய நேரத்தில் உரிய முறையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் எனத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கூறியிருந்தனர். இந்த சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ்தான் முதல்வராக வர வேண்டும் எனப் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பின்னர் அந்த நோட்டீஸ்கள் அகற்றப்பட்டது.
இந்நிலையில் சுதந்திர தின விழா முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர் கோட்டையிலேயே ஆலோசனையில் ஈடுபட்டனர். பிறகு, அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் , சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்கள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தைப் பசுமை வழிச் சாலையில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது வெளியே ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவாளர்கள் வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் வரும் 2021- ஆம் ஆண்டு அ.தி.மு.க சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்களின் வெவ்வேறான கருத்துகளைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. துணை முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வதுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
இதற்கிடையே சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்தார். அப்போது, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் அன்பும் ஆதரவும் தனக்குக் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதனிடையே முதல்வரின் சுதந்திர தின விழா பேச்சு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
