ரூ.10,700 கோடி.. ‘காவிரி மாசுபாட்டைத் தவிரக்க’ .. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்திய நீர்வளத்துறை (ஜல்சக்தி) மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்து சென்னையில் காணொளி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பருவமழையை நம்பித்தான் தமிழகம் இருப்பதாகவும், ஆகவே, நீர் பாதுகாப்புக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 278 குடிமராமத்து பணிகள் ரூ.1,434 கோடி செலவில் மேற்கொண்டதாகவும், ரூ.1,000 கோடி செலவில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டதுடன், மாநில நிதியின் கீழ் ஏராளமான ஆறுகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, தமிழக அரசின் சில நீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுவதாகவும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்காக தேசிய நீர் மேம்பாட்டு முகமை விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், இதுகுறித்து 4-9-2019 அன்று தனது கருத்துகளை மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தில் இருந்து 200 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்குமாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதாகவும், முக்கியமாக காவிரி ஆறு மாசுபடுவதை தடுத்து புத்துயிர் பெறுவதை உறுதி செய்ய ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘வாப்கோஸ்’ என்ற பொதுத்துறை நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று கூறிய முதல்வர், காவிரி விவசாயத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரம் காவிரி என்றும், நதிகளை சுத்தப்படுத்தும் திட்டமான ‘நமாமி கங்கா’ திட்டம் போன்ற ஒரு சிறப்பு தேசிய திட்டமாக இதனை செயல்படுத்தலாம் என்றும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். உலக வங்கி உதவியுடன் மத்திய அரசு 7 மாநிலங்களில் நீர் பற்றாக்குறையை சரி செய்ய, ‘அடல்புஜால் யோஜனா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், தமிழகம் நீர் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்தபோதிலும், இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் இன்னும் சேர்க்கப்படவில்லை என்றும், நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் தமிழகமும் சேர்க்கப்பட வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியதன்படி, மத்திய நீர் ஆணையம் கர்நாடகாவிற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கி உள்ளதாகவும், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், கர்நாடகாவின் மேகதாது அணைக்கட்டு திட்டத்துக்கான முன்மொழிவை நிராகரிக்க மத்திய நீர் ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்தவேண்டும் என்றும் முதல்வர் பேசினார்.

மற்ற செய்திகள்
