'சேத்துவெச்சிருந்த அத்தனையும் செல்லாத பணமா?'.. இடிந்து போன மூதாட்டிகள்.. நெகிழவைத்த திருப்பூர் கலெக்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 29, 2019 04:24 PM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியைச் சேர்ந்த ரங்கம்மாள் (75) மற்றும் தங்கம்மாள்(78) சகோதரிகள் இருவரும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருவதை அடுத்து, இவர்களது மகன்களால் சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர்.
ஆனால், சிகிச்சைக்கு மேற்கொண்டு பணம் வேண்டும் என்பதால் இவர்களது மகன்கள் இவர்களிடம் பணம் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டுள்ளனர். அப்போது, மூதாட்டிகளான ரங்கம்மாள் தான் சேர்த்து வைத்திருந்த 24 ஆயிரத்தையும், தங்கம்மாள் தான் சேர்த்து வைத்திருந்த 22 ஆயிரத்தையும் கொடுத்துள்ளனர்.
அப்போதுதான், அவை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்பதையே அவர்களது மகன்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மூதாட்டிகளோ, இந்த நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பே தங்களுக்கு தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி அறிந்த திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், மூதாட்டிகள் வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை இனி வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியாது, ஆகவே அந்த பணம் செல்லாது, ஆனால் அவர்களின் சிகிச்சைக்கு தேவையான உதவித் தொகையும், அரசு சார்பில் சிகிச்சையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.