இப்படியும் இருக்கிறார்கள் சில ஆசிரியர்கள்! மாணவனுக்கு கொடூர தண்டனை கொடுத்த ஆசிரியை கைது! காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Mar 28, 2019 08:21 PM
திருப்பூரில் உள்ள பாப்பன்நாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 4ம் வகுப்புப்பில் படிக்கும் மாணவர் தனக்கு கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை, முடிக்காமல் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா என்ற கணித ஆசிரியை அவருக்கு தண்டனை வழங்கும் நோக்கில் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியில் உள்ள கொதிக்கும் மெழுகை அந்த சிறுவனின் கையில் ஊற்றியுள்ளார். இதுபோல் 10 முறை செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுவனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அந்த சிறுவன் வீட்டில் எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த காயங்களை கவனித்த சிறுவனின் பாட்டி, குழந்தையை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று பெற்றோரை திட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, நடந்த சம்பவத்தை முழுமையாக அச்சிறுவன் கூறியுள்ளான்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் மாணவனின் தந்தை கேட்டப்போது அவர்கள் எந்த பதிலும் கொடுக்கவில்லை. மேலும் பள்ளி தாளாளரின் மகள் ஆசிரியை ரம்யா என்பதால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சிறுவனின் தந்தை, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை ரம்யாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியை ரம்யா இதுபோல பலமுறை கொடூரமான தண்டனைகளை மாணவர்களுக்கு வழங்குவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கூறியுள்ளனர்.