'இங்க நாம சமையலுக்கு யூஸ் பண்றோம்...' 'ஆனா அந்த நாட்டுல பவுனு விலை...' - இத தெரிஞ்சுக்கிட்டு செய்த மோசடி வேலை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள வீடுகளில் சமையலில் அவசியம் இடம்பெறும் பொருளான மஞ்சளை சட்டத்திற்கு புறம்பாக தூத்துக்குடியில் கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முக்கிய விளைபொருளாக கூறப்படும் மஞ்சள் தற்போது பெருமளவில் இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருவது குறித்த தகவல் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இது பலநாட்களாகவே நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் தூத்துக்குடிப் பகுதிகளில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் விரளி மஞ்சள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வல்லங்கள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன. இது இந்திய மதிப்பில் 26 லட்சம் மதிப்புள்ளது என்று சொல்லப்பட்டாலும், அதன் இலங்கை மதிப்பு அந்நாட்டுக் கரன்சியில் ஒரு கோடியையும் தாண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் (03.01.2021) தூத்துக்குடி வடபாகம் போலீசார் திரேஸ்புரம் கடற்கரைப் பக்கம் ரோந்து சென்றிருக்கும் போது அங்குள்ள படகு ஒன்றில் சிலர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் மூட்டைகளை சோதனையிட்டதில் 30 மூடைகளில் மஞ்சள் சிக்கியுள்ளது, அதன் எடை 1,200 கிலோ எனவும், இந்திய மதிப்பில் 2 லட்சம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் இதுகுறித்து கூறும் போது, 'தரையில் கடத்தப்படுகிறபோது தடுத்து கைப்பற்றிவிடுகிறோம். ஆனால் அவை படகுகள் மூலம் நடுக்கடலில் கைமாறி இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன. செயின் தொடர்பு போன்று செயல்படுகின்றனர். கடலில் நடப்பதை அதன் தடுப்பு காவல் படையினரின் பொறுப்பில் வருகிறது' எனவும் கூறியுள்ளார்.