“அந்த அறிக்கை என்னுடையது அல்ல.. ஆனால் அதில் வந்திருக்கும் ‘இந்த’ தகவல்கள் உண்மை!” - போலி அறிக்கையை விட வைரல் ஆகும் ‘ரஜினியின்’ பரபரப்பு ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக ஊடகங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல் ரஜினி கூறியதுபோல் ஒரு போலி அறிக்கை பரவி வருகிறது.
அந்த அறிக்கையில், ரஜினி மருத்துவர்கள் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை கேட்டதாகவும், கொரோனா காலத்தில், தம் உடல் நலம் மற்றும் மக்களின் உடல் நலம் கருதி அரசியல் சேவையில் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டதால் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதாகவும், அதனால் கொரோனா எளிதில் தொற்றிக்கொள்ளும் என்றும், இதன் காரணமாகவே கட்சி ஆரம்பிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தாமதமாவதாகவும் ரஜினி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களை குழப்பத்துக்குள்ளாக்கிய இந்த அறிக்கை வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இதுகுறித்து ரஜினியே மனம் திறந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020
இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.