"ஜனவரிக்குள்ள கட்சி ஆரம்பிக்கணும்.. கொரோனாவால மக்களை சந்திக்க வேண்டாம்னு சொல்றாங்க.. தடுப்பூசிய உடம்பு தாங்குமானு தெரியல" - ரஜினி பெயரில் வெளியான அறிக்கை.. குழப்பத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக ஊடகங்கள் வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல் ஒரு கடிதம் பரவிவருகிறது. இக்கடிதம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை கிளப்பியிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக மக்கள் எழுச்சியை உண்டாக்கி அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டித் தன் கட்சி பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம் என்று திட்டமிட்டதாக ரஜினி கூறியதுபோல் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி பெயரில் வெளியான அந்த அறிக்கையில், “கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த இயலவில்லை, 2011ம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தேன். 2016 மே மாதத்தில் மறுபடியும் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மருத்துவர்களிடம் அரசியல் பிரவேசத்தை பற்றி ஆலோசனை கேட்டபோது, கொரோனா எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம் இருப்பதால் கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து அவர்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
நமது உயிர் பற்றிய கவலை இல்லை, அதே நேரத்தில் நம்மை நம்பி வருவோரின் நலன் குறித்து தான் கவலை. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், கட்சி ஆரம்பித்து இடையில் உடல்நலம் பாதிப்பு அடைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும். ஒருவேளை கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் ஆரம்பிக்கவேண்டும், அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும் என்பதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவுக்கே இதனை விடுகிறேன்.
கொரோனா இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதேபோல், கொரோனாவுக்கு தடுப்பூசியும் இப்போதைக்கு வருவதாய் தெரியவில்லை. அப்படியே வந்தாலும், உங்களுக்கு செலுத்தினால் உங்கள் உடல் அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும் என மருத்துவர்கள் கூறினர். இப்போது 70 வயது என்பதோடு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் மற்றவர்களை விட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் கொரோனா எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். எனவே மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போலியான அறிக்கையை யார் வெளியிட்டிருப்பார்கள் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
