தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் திட்டம்!.. இன்று முதல் தொடக்கம்!.. சென்னையில் மட்டும் இவ்வளவா?.. முதல்வர் பழனிசாமி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் மினி கிளினிக் திட்டம் இன்று(14.12.2020) முதல் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் மொத்தம் 200 மினி கிளினிக் செயல்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவியதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து விட்டதால், ஊரடங்கு உத்தரவும் பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டது.
கொரோனா உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் மருத்துவமனைகளில் மற்ற நோய்களைவிட கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை பெற முடிகிறது.
ஆனாலும் இருமல், சளி இருந்தால் கொரோனா தொற்று குறித்த சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் சாதாரண காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கு உடனே சிகிச்சை பெற முடியாத சூழல் பலருக்கு ஏற்பட்டது.
இதையறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
மருத்துவ வசதிகள் எளிதாக கிடைக்கும் வகையில் மினி கிளினிக்கிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் இடம்பெறுவார்கள் என்றும் காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கும் இந்த மினி கிளினிக்கில் மருந்துகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதை செயல்படுத்துவதற்காக புதிதாக டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்காக ஏராளமான டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து 2,000 மினி கிளினிக் திட்டம் இன்று (14.12.2020) தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு 'முதல் அமைச்சரின் அம்மா மினி கிளினிக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (14.12.2020) காலை ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். ஏழை எளிய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் மினி கிளினிக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பேரறிஞர் அண்ணா வழியில் அரசு செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் மொத்தம் 200 மினி கிளினிக் செயல்பட உள்ளது. இதில் 47 இடங்களில் முதல்கட்டமாக மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 20 இடங்களில் இன்று(14.12.2020) முதல் மினி கிளினிக் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் மினிகிளினிக் திட்டம் இன்று (14.12.2020) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எளிதாக சிகிச்சை பெற அரசு வழிவகை செய்துள்ளது.

மற்ற செய்திகள்
