‘முதலமைச்சர் என்பது அடுத்த கட்டம்... இதுதான் எனக்கு முதலில்!’... முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘பளிச்’ பதில்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண் திட்ட பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றியதுடன், பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். புரேவி புயல் சமயத்தில் மருத்துவ முகாம்கள், பயிர், வாழை சேதம் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்க உத்தரவு உள்ளிட்டவை பற்றியும் முன்னதாக உரையாற்றினார்.

அப்போது, வெள்ளத்தடுப்பு கால்வாய்கள் உள்ளிட்டவை மற்ற இடங்களில் நிறைவேற்றப் பட்டதாகவும், புயல் நேரங்களில் திருவாரூர் போன்ற சமவெளிப் பரப்புகளில் நீர் மட்டம் உயர்வதால், இத்தகைய பாதிப்புகள் இருப்பதாகவும், அவை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொங்கல் சமயங்களில் செங்கரும்புகளை மக்களுக்கு வழங்க அரசு பரிசீலிக்கும் என்றும், அம்மாவின் அரசில்தான் அதிகமான தூண்டில் வளைவுகளை துறைமுகங்களில் அமைத்துள்ளதாகவும், நீர்ப்பாசனத்துக்கான துறை முதலமைச்சரிடமே இருக்கிறது என்று பதில் அளித்தார்.
பின்னர் வேளாண் தொடர்பான மத்திய அரசின் புதிய கொள்கைகள் தொடர்பான முக்கியமான 3 சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்று சொல்லுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அத்துடன் திமுகவின் விமர்சனத்துக்கு பதில் அளித்த முதல்வர், “திராவிட முன்னேற்ற கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கையில், பக்கம் 23ல், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும், இந்த கொள்கையின் அடிப்படையில் தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேளாண் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர் இன்றி சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன் பெறுவதற்கு உதவும் வகையில் உற்பத்தியாளர்களுக்கும் வாங்குபவர்களுக்குமான எளிய பரிவர்த்தனை நிகழ, நிர்வாகம் வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் அன்றாடம் சந்தையில் விலை நிலவரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்க முடியும்” என குறிப்பிட்டிருப்பதாகவும், அந்த அறிவிப்பில் இருப்பதைத்தான் அதிமுக 2019ல் கொண்டு வந்ததாகவும், மத்திய அரசு இப்போது கொண்டு வருவதாகவும், ஆக, இந்த சட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்க கூடியதாக இருப்பதால்தான், தான் ஒரு விவசாயியாக இதனை வரவேற்பதாகவும், முதலமைச்சர் என்பது அடுத்த கட்டம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய முதல்வர், “ஆ.ராசாவெல்லாம் திமுகவிற்கு வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு பெரிய ஆள் இல்லை. அவர் தவறு செய்ததால் தான் அவர் எந்த கட்சியுடன் கூட்டணியில் இருந்தாரோ அதே காங்கிரஸ் ஆட்சியிலேயே கைது செய்யப்பட்டார். அந்த அளவுக்கு நாட்டுக்கு நல்ல பெயர் வாங்கி பெருமை தேடி தந்தவர் அவர். அவரிடம் வைட்டமின் நிறைய இருப்பதால் திமுக அவரை தங்களுடன் வைத்திருக்கிறது. நான் இன்று வரை வேளாண் சார்ந்த வருமானத்தையே காண்பித்துக் கொண்டிருக்கிறேன்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“அமெரிக்காவிற்கும், துபாய்க்கும் நான் சென்ற போது 10,12 வழிச்சாலைகள் எல்லாம் இருக்கின்றன என்பதை காண முடிந்தது. இதன் மூலம் எரிபொருள் குறைகிறது, அதிக வாகனங்கள் செல்வதால் கால அளவு குறைகிறது. இன்றைய நிலையில், 100 வாகனங்கள் செல்லும் சாலையில் 250 வாகனங்கள் கூடுதலாக சென்றுகொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு சாலை அமைத்தாக வேண்டும். எனினும் இந்த திட்டம் மத்திய அரசுடையதுதான். தமிழக அரசு அதற்கு வழிவகை செய்கிறது. அவ்வளவே!” என்றும் முதல்வர் பேசினார்.

மற்ற செய்திகள்
