மாமன், மச்சான் உறவு நல்லா இருக்கணும்னா இதைப் பண்ணுங்க.. தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவில் திருவிழாவா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் மாமன் மைத்துனர் உறவு வலுப்பட மக்கள் வித்தியாசமான நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.
முத்தாலம்மன் கோவில்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரவப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில். சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழாவில் மக்கள் விரதம் இருந்து தீச்சட்டி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இந்த கோவிலுக்கு வருகின்றனர்.
வினோத நேர்த்திக்கடன்
3 நாட்கள் நடைபெறும் இந்த முத்தாலம்மன் திருவிழாவில் மாமன் மைத்துனர் உறவு வலுப்பட வித்தியாசமான நேர்த்திக் கடன் ஒன்றை மக்கள் செலுத்தி வருகின்றனர். சேற்றில் துடைப்பத்தை நனைத்து மாமன் மைத்துனர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். கோவிலுக்கு வெளிப்புறத்தில் கிடக்கும் சேற்றை உடலில் பூசிக் கொண்டு தங்களது உறவினர்களை அழைத்து அவர்களுக்கும் துடைப்பத்தால் அடி கொடுக்கின்றனர் பக்தர்கள்.
நம்பிக்கை
உறவினர் தங்களுக்குள் ஏற்பட்ட சண்டைகள் தீரவும், கவலை நீங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த நேர்த்திக் கடன்களை செய்வதாக கூறுகின்றனர். தங்களது உறவு முறைகளை துடைப்பத்தால் அடித்து கொள்ளும் இந்த பக்தர்கள் இந்த திருவிழாவை காண பிறரை தொந்தரவு செய்வதில்லை. மேலும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்கின்றனர் இந்த கிராமத்தார்.
திருவிழாவின் போது மக்கள் அனைவரும் ஒன்று கூடி முத்தாலம்மனை வழிபட்டு பெண் வேடமிட்டும் நடனமாடி மகிழ்கின்றனர். மேலும், ஒவ்வொரு வருட திருவிழாவின் போதும் மழை பொழியும் என்பதும் இந்த கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
மாமன், மச்சான் உறவு வலுப்பட ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் இந்த வினோத திருவிழாவை காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இந்த முத்தாலம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8