பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.. ‘எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பஸ் ஏறணும்..?’ முழு விவரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்டிகையையொட்டி வெளியில் செல்பவர்கள் வசதிக்காக இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொங்கலுக்கு ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக இன்று (11.01.2022) முதல் 3 நாட்களுக்கு 16300 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் மாதாவரம், கே.கே.ஆர் நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 10300 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16768 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதன்படி மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கே.கே நகர், மா.போ.க பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் அறிஞர் அண்ணா (MEPZ) பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். அதில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
