'இப்படி ஒரு மனிதர் மீண்டும் கிடைப்பாரா'?.. தள்ளாத வயதிலும் சமூகப் பணி!.. எளிமையான வாழ்க்கை!.. டிராஃபிக் ராமசாமி காலமானார்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலைக் குறைவால் காலமானார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர், டிராஃபிக் ராமசாமி (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி, தாமாக முன்வந்து சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். இதையடுத்து, போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அப்போது முதல் டிராஃபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.
அதேபோல், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொதுமக்களின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். அதற்காக போராடி தீர்வும் கண்டவர். மேலும், சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த சில வாரங்களாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மிகவும் கவலைக்கிடமாக இருந்த அவரது உடல் நிலை காரணமாக, அதே மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திரு. டிராஃபிக் ராமசாமியின் மறைவுக்கு Behindwoods ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

மற்ற செய்திகள்
