‘என்ன சத்தம் அது?’.. ஒரே மர்மமா இருக்கே.. பதறியடித்து போலீஸுக்கு கால் பண்ணிய அக்கம்பக்கத்தினர்.. விசாரணையில் அதிரவைத்த ‘ஐஸ்’ வியாபாரி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் புதையல் இருப்பதாக ஐஸ் வியாபாரி ஒருவர் குழி தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் அப்பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டுக்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அவர், இது சம்பந்தப்பட்ட நபர்களை தனது நண்பர்கள் மூலம் தேடச் சொல்லியுள்ளார்.
அப்போது பரமத்திவேலூரைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரது தொடர்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து புதையல் எடுப்பதற்காக பூசாரி மற்றும் நண்பர்களுடன் இணைந்து வீட்டுக்குள் மாந்திரீக பூஜைகளை பிரபு நடத்தியுள்ளார். இதன்பின்னர் 3 நாட்கள் இரவு பகலாக 20 அடி ஆழத்துக்கும் மேல் வீட்டுக்குள் குழி தோண்டியுள்ளனர்.
இதனால் ஐஸ் வியாபாரி பிரபுவின் வீட்டில் இருந்து சத்தம் கேட்கவே, அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவரது வீட்டுக்கு அடிக்கடி புதிதாக நபர்கள் வந்து சென்றதால், அச்சத்தில் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக பிரபுவின் வீட்டுக்கு வந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புதையல் தேடி வீட்டுக்குள் குழி தோண்டி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரபு உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதையல் ஆசையால் நரபலி போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
